தேர்தல் ஆணையத்திற்கும் பாஜகவிற்கும் இடையே வாக்குகளைத் திருட கூட்டுச்சதி நடைபெற்று வருவதாகவும், பிகாரில் ஒரு வாக்குகூட திருட காங்கிரஸ் அனுமதிக்காது என்று ராகுல் காந்தி கூறினார்.
பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை ஆக. 17 முதல் தொடங்கியுள்ளன.
பேரணியின் மூன்றாவது நாளில் பகத் சிங் சௌக்கில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ராகுல் உரையாற்றினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது நீங்கள் போராடிப் பெற்றுவந்த அரசியலமைப்புச் சட்டம் உங்களுக்கு வழங்கிய உரிமை, மோடி, அமித்ஷா, தேர்தல் ஆணையர்கள் உங்களிடமிருந்து பறிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், நான் உள்பட மற்ற தலைவர்கள் பிகாரில் ஒருவாக்குகூட திருட அனுமதிக்க மாட்டோம்.
ஹரியாணா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசத்தில் தேர்தல்களைத் தேர்தல் ஆணையம்-பாஜக திருடிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால் பிகாரில் அதை அனுமதிக்காது.
இயந்திரத்தில் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் மற்றும் சிசிடிவி காட்சிகளை வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் அதனை மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
பிகாரில் பாஜகவினர் புதிய முறையில் வாக்குத் திருட்டு செய்கிறார்கள். மக்களின் கண்களுக்கு முன்பாகவே இந்தத் திருட்டு நிகழ்கிறது. ஆனால் வாக்குத் திருட்டு செய்ய அனுமதிக்க மாட்டோம்.
வாக்குத் திருட்டு என்பது பாரத மாதா மீதான தாக்குதல் என்று அவர் வலியுறுத்தினார். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கும் இந்தியா கூட்டணி அரசு அமைக்கும்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
தேர்தல் ஆணையத்தின் மீதான தனது தாக்குதலைத் தீவிரப்படுத்திய காந்தி, முழு நாடும் தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரத்தைக் கேட்கும் என்றும், நேரம் வழங்கப்பட்டால், தனது கட்சி ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குத் திருட்டை வெளியிடும் என்றும் திங்களன்று கூறியிருந்தார்.
செவ்வாயன்று, பேரணி கயாவின் வஜீர்கஞ்சில் இருந்து தொடங்கி பின்னர் நவாடாவை அடைந்தது. செப்டம்பர் 1-ம் தேதி பாட்னாவில் பேரணி நிறைவடைகிறது.
மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ராகுலின் மணிப்பூர் முதல் மும்பை பாரத் ஜோடோ நீதி யாத்திரை நடந்தது போல், ஹைபிரிட் முறையில் அதாவது நடைப்பயணம் மற்றும் வாகனம் மூலம் பேரணி மேற்கொள்ளப்படுகிறது.
இது நாளந்தா, ஷேக்புரா, லக்கிசராய், முங்கேர், பாகல்பூர், கதிஹார், பூர்னியா, அராரியா, சுபால், மதுபானி, தர்பங்கா, சீதாமர்ஹி, கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், கோபால்கஞ்ச், சிவன், சாப்ரா மற்றும் அரா ஆகிய இடங்களையும் கடந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.