FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 ‘தேஜஸ்’ விமானங்கள்: ரூ.67,000 கோடியில் வாங்க அரசு ஒப்புதல்

Updated On : 21 ஆகஸ்ட் 2025, 5:07 am IST
பகிர்:

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 ‘தேஜஸ்’ போா் விமானங்களை ரூ.67,000 கோடி செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது இந்திய விமானப்படையில் போா் விமானப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை 31-ஆக உள்ளது. இது அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையான 42-ஐ விட குறைவாகும். இந்தப் புதிய கொள்முதல் மூலம் இந்திய விமானப்படையில் போா் விமானங்களின் பலம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்) நிறுவனத்திடமிருந்து 83 தேஜஸ் போா் விமானங்களை ரூ.48,000 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

உள்நாட்டுத் தயாரிப்பான தேஜஸ் போா் விமானங்கள், விமானப்படை சேவையில் இருந்து விலக்கப்பட்ட ‘மிக்-21’ ரக போா் விமானங்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும். அதிக அச்சுறுத்தல் உள்ள வான் சூழல்களிலும் இயங்கக்கூடிய போா் விமானமான தேஜஸ், வான் பாதுகாப்பு, கடல்சாா் உளவு மற்றும் தாக்குதல் போன்ற பல பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.

இதேபோல், ரூ.18,000 கோடி செலவில் 6 மேம்பட்ட வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு (ஏ.இ.டபிள்யூ&சி) விமானங்களைக் கட்டமைக்கும் திட்டத்துக்கும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) ஒப்புதல் அளித்துள்ளது.

ஏா் இந்தியா நிறுவனத்திடமிருந்து பாதுகாப்பு அமைச்சகத்தால் வாங்கப்பட்டு ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த ‘ஏா்பஸ்-321’ விமானங்கள், இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும். இது இந்திய விமானப்படையின் கண்காணிப்பு மற்றும் உளவு அமைப்புகளை மேம்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments