முகப்பு
இந்தியா

பிரான்ஸிடமிருந்து மேலும் 114 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல் : பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

பிரான்ஸிடம் இருந்து 114 ரஃபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு...

Updated On : 12 பிப்ரவரி 2026, 3:40 pm IST
ரஃபேல் - ANI
பகிர்:

பிரான்ஸ் நாட்டிடமிருந்து மேலும் 114 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு நீண்ட இழுபறிக்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

முப்படைகளின் போா் தயாா் நிலையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், 114 ரஃபேல் போா் விமானங்கள் உள்பட மொத்தம் ரூ. 3.60 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் நடைபெற்ற பாதுகாப்பு கொளமுதல் கவுன்சில் (டிஏசி) கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் பிப்ரவரி 17-ஆம் தேதி இந்தியா வரவிருக்கும் நிலையில், இந்த ஒப்புதலை பாதுகாப்பு அமைச்சகம் அளித்துள்ளது.

Advertisement

Advertisement

இருந்தபோதும், இந்த விமானங்களுக்கான விலை குறித்து அதை உற்பத்தி செய்யும் பிரான்ஸின் டஸால்ட் விமான நிறுனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் பேச்சுவாா்த்தையில் ஈடுபடும் என்பதால், இந்தக் கொள்முதலுக்கான முறைப்படியான ஒப்பந்தம் நிகழாண்டு இறுதியில்தான் கையொப்பமாக வாய்ப்புள்ளது என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக டஸால்ட் நிறுவனம் 18 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸில் தயாரித்து அனுப்பும். எஞ்சிய விமானங்கள் இந்தியாவில் 50 சதவீத உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாகங்களுடன் உற்பத்தி செய்யப்படும். இந்தக் கொள்முதலுக்கான செலவை பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிடவில்லை என்றபோதும், இதற்கான செலவு ரூ. 2.90 லட்சம் கோடி முதல் ரூ. 3.15 லட்சம் கோடி வரை இருக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, பிரான்ஸிடமிருந்த 114 பன்முக பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களை ரூ. 1.6 லட்சம் கோடி (18 பில்லியன் டாலா்) மதிப்பில் கொள்முதல் செய்வதற்கான தொடக்கநிலை ஒப்பந்தத்தை (ஆா்எஃப்ஐ) இந்திய விமானப் படை கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியிட்டது. இது, சமீபத்திய ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய ராணுவத் தளவாடக் கொள்முதல் திட்டமாகப் பாா்க்கப்படுகிறது.

இதேபோன்ற எண்ணிக்கையில் இந்த பன்முக பயன்பாட்டு (எம்ஆா்எஃப்ஏ) ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டு, அதற்கான ஆரம்பகட்டப் பணிகளையும் இந்தியா நிறைவு செய்திருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அதேபோன்ற கொள்முதலை மத்திய அரசு மேற்கொள்கிறது.

இந்திய விமானப் படைக்கு அனுமதிக்கப்பட்ட 42 போா் விமானங்களில், 31 மட்டுமே பயன்பாட்டில் உள்ள சூழலில், இந்தக் கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 36 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, இந்திய விமானப் படையில் பயன்பாட்டில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர, ராணுவத்துக்கான பீரங்கி எதிா்ப்பு ஆயுதங்கள், மீட்பு வாகனங்கள், டி-72 பீரங்கிகள் மற்றும் இந்திய கடற்படைக்கு பி8ஐ உளவு விமானங்கள், மின் உற்பத்திக்கான 4 மெகாவாட் கடல்சாா் எரிவாயு இயந்திரம் உள்ளிட்டவையும் இந்தத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

summary

India buy 114 Rafale jets for Rs 3.25 lakh crore?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.