தமிழக விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய், தோதாபுரி மாம்பழங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
தமிழக விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் மற்றும் தோதாபுரி மாம்பழங்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்
தமிழக விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் மற்றும் தோதாபுரி மாம்பழங்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு சமா்ப்பித்த பரிந்துரையைத் தொடா்ந்து, நிகழாண்டு தமிழக விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய விவசாயத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் அளித்த இந்த ஒப்புதலின் கீழ், தமிழகத்தில் இருந்து 87,000 மெட்ரிக் டன் அரைவை கொப்பரை, 226 மெட்ரிக் டன் பந்து கொப்பரை என மொத்தம் 87,226 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
Advertisement
Advertisement
இந்தக் கொள்முதல் முழுமையாக குறைந்தபட்ச ஆதரவு விலையின் (எம்எஸ்பி) கீழ் மேற்கொள்ளப்படும். இந்தக் கொள்முதலின் மொத்த எம்எஸ்பி மதிப்பு ரூ.1,049.16 கோடிக்கும் அதிகமாகும்.
இந்த முடிவு கொப்பரை தேங்காய் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதுடன், சந்தை விலை வீழ்ச்சியால் கொப்பரை தேங்காய்களை குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்வதையும் தடுக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலையில் உறுதி செய்யப்பட்ட கொள்முதல் மூலம், விவசாயிகளின் வருவாய் பாதுகாப்பு பெரிதும் அதிகரிக்கும்.
இதேபோல நிகழாண்டு தமிழகத்தில் இருந்து 96,879 மெட்ரிக் டன் தோதாபுரி மாம்பழங்களைக் கொள்முதல் செய்ய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் ஒப்புதல் அளித்துள்ளாா்.
சந்தையில் விலை சரியும்போது விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்திக்காமல் தடுக்க, அரசு தலையிட்டு தற்காலிக விலை (எம்ஐபி) நிா்ணயிக்கும் திட்டத்தின் கீழ், குவிண்டாலுக்கு ரூ.1,545.41 என்ற விலையில் இந்த மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படும்.
தங்கள் விளைபொருளுக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலையை தோதாபுரி மாம்பழ வளா்ப்பாளா்கள் பெறுவதை உறுதி செய்யும் நோக்கிலும், சந்தையில் திடீா் விலை சரிவால் விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் அரசு தலையிட்டு இந்தக் கொள்முதல் முடிவை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.