தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் நேற்று(புதன்கிழமை) காலை முதல்வர் ரேகா குப்தாவின் வீட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டமான ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சியின்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முதல்வர் ரேகா குப்தாவை தலைமுடியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் கடுமையாகத் தாக்கினார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாதுகாப்பு கருதி தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தில்லி முதல்வர் வீட்டில் இன்று(வியாழக்கிழமை) காலை முதல் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக தில்லி காவல்துறையினர் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர்.
தில்லி முதல்வரை தாக்கிய விவகாரத்தில் குஜராத்தைச் சேர்ந்த 41 வயதான ராஜேஷ் கிம்ஜி என்பவரை காவல் துறையினர் கைது செய்து தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் கடந்த செவ்வாய்க்கிழமைதான் முதல்முறையாக தில்லி வந்துள்ளார். மேலும் அவர் ஒரு ‘நாய் பிரியர் (Dog Lover)’ என்று கூறப்படுகிறது.
சமீபத்தில், தில்லியிலும் சுற்றியுள்ள புறநகர்களிலும் திரியும் தெருநாய்களை 8 வாரங்களுக்குள் பிடித்து நிரந்தரமாகப் காப்பங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. தில்லி முதல்வர் ரேகா குப்தா முதலில் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்திருந்தாலும், பின்னர் தெரு நாய்கள் மீது கடுமையான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
நாய்கள் மீதான அன்பினால் தன் மகன் இவ்வாறு செய்துவிட்டதாகவும் முதல்வரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் ராஜேஷின் தாயார் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.