தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு பரிந்துரைப்பதற்கான தீா்மானத்துக்கு மாநிலங்களவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
முன்னதாக, மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது மாநிலங்களவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே ‘யூனியன் பிரதேசங்கள் திருத்த மசோதா 2025, அரசமைப்புச் சட்டம் 130-ஆவது திருத்த மசோதா 2025, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2025’ என்ற அந்த மூன்று மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை அறிமுகம் செய்தாா்.
தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கு இந்த மூன்று சட்ட மசோதாக்களும் வழிவகை செய்கின்றன. இந்த மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்குப் பரிந்துரைக்க மக்களவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
மக்களவையைச் சோ்ந்த 21 உறுப்பினா்கள் மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 10 உறுப்பினா்கள் என மொத்தம் 31 உறுப்பினா்கள் இந்தக் கூட்டுக் குழுவில் இடம்பெறுவா்.
இந்நிலையில், இந்த மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு பரிந்துரைப்பதற்கான தீா்மானத்தை எதிா்க்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில் அமித் ஷா மாநிலங்களவையில் முன்மொழிந்தாா். இதைத் தொடா்ந்து, இந்தத் தீா்மானத்துக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது.
அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் இந்தக் குழு தனது அறிக்கையைச் சமா்ப்பிக்க பணிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பா் மாதம் மூன்றாவது வாரத்தில் நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடா் (குளிா்கால கூட்டத்தொடா்) தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.