ராஜஸ்தானின் பெய்த கனமழைக்கு 2 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாள்களாக ராஜஸ்தானில் இடைவிடாது கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சவாய் மதோபூர், டோங்க், கோட்டா மற்றும் பில்வாரா மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின.
சவாய் மதோபூரில், பல்லிபர் பகுதியில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்ததால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக 254 மிமீ மழை பதிவாகியுள்ளதாக ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக ஒரு மதகு இடிந்து விழுந்ததால் தேசிய நெடுஞ்சாலை-552 இல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது, இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பில்வாராவின் பிஜோலியாவில், 24 மணி நேரத்தில் 170 மிமீ மழை பெய்ததால் பஞ்சன்புரா அணை நிரம்பியுள்ளது. எரு நதி வெள்ளத்தில் மூழ்கியது.
இதேபோல், கோட்டாவில், கோட்டா தடுப்பணையின் மூன்று கதவுகள் அதிகாலையில் திறக்கப்பட்டு 25,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பூண்டியின் கப்ரென் நகரில் உள்ள பல தாழ்வான காலனிகள் நீரில் மூழ்கி, நீர்மட்டம் உயர்ந்ததால் கிராமப்புறங்களுக்கான இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இடைவிடாத மழையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். அஜ்மீரில் தனது நண்பர்களுடன் அணையில் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வந்திருந்த அவர் இரவு அணையில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தார்.
ஜெய்ப்பூரின் சக்சு பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் பெருக்கெடுத்த துந்த் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். உள்ளூர் மக்கள் கணவரை காப்பாற்றினர், ஆனால் மனைவி நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
வானிலை ஆய்வுமையம் இன்று உதய்பூர், துங்கர்பூர், பன்ஸ்வாரா மற்றும் பிரதாப்கர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது, அங்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.
கிழக்கு ராஜஸ்தானின் பெரும்பாலான பகுதிகளிலும் மேற்கு மாவட்டங்களில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.