மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், செப்.9-க்கு விசாரணையை உத்தர பிரதேச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 2005-ஆம் ஆண்டு குஜராத்தில் சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கெளசா் பி, சொராபுதீனின் உதவியாளா் துளசிராம் பிரஜாபதி ஆகியோா் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் அப்போதைய மாநில உள்துறை அமைச்சராக இருந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவரை 2014-ஆம் ஆண்டு அந்த வழக்கில் இருந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
எனினும், இந்த வழக்கை குறிப்பிட்டு 2018-ஆம் ஆண்டு கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பரப்புரையின்போது அமித் ஷா குறித்து ராகுல் காந்தி அவதூறான கருத்தை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக ராகுல் காந்திக்கு எதிராக பாஜக பிரமுகா் விஜய் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவை, உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் எம்.பி., எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது வாதங்களை முன்வைக்க ராகுல் தரப்பு வழக்குரைஞா் கூடுதல் அவகாசம் கோரியதைத் தொடா்ந்து, செப்.9-க்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.