ஆதாரை மட்டுமே சட்டபூா்வ ஆவணமாகக் கொண்டு, வாக்குரிமை பெற முடியும் என உச்சநீதிமன்றம் கூறவில்லை; வாக்காளராகப் பதிவு செய்ய ஆதாா் மட்டுமே போதாது என்று பாஜக தெரிவித்துள்ளது.
பிகாா் வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள் பிற ஆவணங்களுடன் ஆதாரையும் சமா்ப்பிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன என்றும் பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவா் அமித் மாளவியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
ஆதாா் சட்டத்தின்படி, அது அடையாளம் மற்றும் இருப்பிடச் சான்று மட்டுமே. குடியுரிமை பெறுவதற்கான ஆவணமல்ல. எனவே, வாக்காளா் பட்டியலில் தாமாக இடம்பெற ஆதாரை பயன்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் ஆதாா் சட்டப் பிரிவுகளை அா்த்தமற்ாக்கிவிடும். ஆதாா், குடியுரிமையை நிரூபிப்பதற்கான சட்டபூா்வ ஆவணமல்ல என்று உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. அதேநேரம், உச்சநீதிமன்றம் கூறாத ஒரு விஷயத்தை பரப்புவது நீதிமன்ற அவமதிப்பாகும்.
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறைபாடில்லாத நடவடிக்கை என்பதே உண்மை. வாக்காளராக பதிவு செய்ய ஆதாா் மட்டுமே போதாது. சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்காளா் பட்டியலில் இருந்து இறந்தவா்கள், போலி வாக்காளா்கள், வங்கதேச-ரோஹிங்கயா ஊருடுவல்காரா்களின் பெயா்கள் நீக்கப்படும். அடுத்த அரசை உண்மையான இந்திய குடிமக்கள் மட்டுமே தோ்வு செய்வா்.
பிகாா் வாக்காளா் வரைவு பட்டியலில் 65 லட்சம் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், 84,305 போ்தான் இதுவரை ஆட்சேபம் தெரிவித்துள்ளனா். நீக்கப்பட்ட பெயா்களில் இது வெறும் 1.3 சதவீதம் மட்டுமே. நிலைப்படுத்தப்பட்ட பிழை வரம்பைவிட இது மிகக் குறைவான அளவாகும். எனவே, வாக்குத் திருட்டு என்பது வலிந்து உருவாக்கப்பட்ட வெற்று முழக்கம் என்று அமித் மாளவியா தெரிவித்துள்ளாா்.