அமலாக்கத் துறை தனது வீட்டில் சோதனைக்கு வருவதை அறிந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவா் ஏறிக் குதித்து தப்பியோட முயன்றாா். எனினும், அதிகாரிகள் அவரை துரத்திப் பிடித்து கைது செய்தனா்.
மேற்கு வங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை நியமனங்களில் நடந்த ஊழல் தொடா்பான பண முறைகேடு வழக்கில், முா்ஷிதாபாத் மாவட்டத்தின் பா்வான் பகுதியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவின் வீட்டிலும், ரகுநாத்கஞ்ச் பகுதியில் உள்ள அவரது மாமனாா் வீட்டிலும் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை நடத்தியது.
அதிகாரிகள் சோதனைக்கு வந்தபோது, எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா தனது வீட்டின் சுற்றுச்சுவரில் ஏறிக் குதித்து தப்பிச் சென்றாா். பின்னா், அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினா் வயல்வெளியில் அவரை துரத்திச் சென்று பிடித்தனா். அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்காத குற்றச்சாட்டில் அவா் கைது செய்யப்பட்டாா்.
உடல் முழுவதும் சேறு, சகதியுடன் இருக்கும் நிலையில், எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவை அதிகாரிகள் அழைத்து வரும் விடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவா் அளித்த பேட்டியில், ‘ஆதாரங்களை அழிக்க முயற்சிக்கும் வகையில், எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா தனது கைப்பேசிகளை அருகிலுள்ள குளத்தில் வீசியுள்ளாா். அந்த இரண்டு கைப்பேசிகளும் குளத்தில் இருந்து மீட்கப்பட்டன. அவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்படும். கைது செய்யப்பட்ட எம்எல்ஏவிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கின் முறைகேட்டில், பிா்பூம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் பணப் பரிவா்த்தனை செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிா்பூம் மாவட்டத்தைச் சோ்ந்த அந்த நபா், அமலாக்கத் துறையினருடன் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவின் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றாா். பிா்பூம் பகுதியில் உள்ள எம்எல்ஏவின் தனிப்பட்ட உதவியாளரின் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது’ என்றாா்.
இந்தப் பணமுறைகேடு வழக்கில் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவை அமலாக்கத் துறை ஏற்கெனவே கடந்த 2023, ஏப்ரலில் கைது செய்தது. 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், கடந்த மே மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
இந்த ஊழல் தொடா்பாக அமலாக்கத் துறை மட்டுமன்றி சிபிஐயும் விசாரித்து வருகிறது. அந்த வகையில், எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவின் மனைவியிடம் சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.