புது தில்லி: குற்றப் பின்னணி உள்ளவர்கள், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் பதவி பறிக்கப்படும் சட்ட மசோதாவில், பிரதமர் நரேந்திர மோடி தன்னையும் சேர்த்துக் கொண்டுள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
புது தில்லியில் இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில், பதவி பறிப்பு சட்ட மசோதா, குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமித் ஷா பேசியிருக்கிறார்.
தற்போது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டிருக்கும் பதவி பறிப்பு சட்ட மசோதாவில், பிரதமர நரேந்திர மோடி தன்னையும் சேர்த்துக்கொண்டுள்ளார். ஆனால், முன்னதாக, பிரதமராக இருந்த இந்திரா காந்தி, 39வது சட்டப்பிரிவில் திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். அந்தப் பிரிவானது, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அவைத் தலைவர் ஆகியோர், நீதிமன்றங்களின் நீதித்துறை விசாரணையிலிருந்து பாதுகாக்கும் வகையில் இருந்தது. தற்போது பிரதமர் மோடி தனது பதவிக்கு எதிராக ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளார், அதன்படி, பிரதமர் சிறைக்குச் செல்ல நேர்ந்தால், அவர் ராஜிநாமா செய்ய வேண்டும், என்று அமித் ஷா கூறினார்.
மேலும் பேசிய அவர், பதவி பறிப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலரின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், கைதாகி 30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்கள் பதவி நீக்கப்படும் வகையில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. ஆளும் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாததால், இந்த சட்ட மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் குறித்துப் பேசிய அமித் ஷா, குடியரசுத் தலைவர் இந்தியாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர், பிரதமர் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர். குடியரசுத்துணைத் தலைவரை இந்தியாவின் தெற்குப் பகுதியில் இருந்து தேர்வு செய்ய முடிவெடுத்தோம். சி.பி. ராதாகிருஷ்ணன் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர் என்று அமித் ஷா தெரிவித்தார்.
நாங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்திருப்பது என்ன தவறா? பிரதமர் மோடி, நான் என அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைப்பைக் கொண்டிருக்கிறோம். ஜெகதீப் தன்கர் ராஜிநாமா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தேவையற்ற பிரச்னையைக் கிளப்புகிறார்கள் என்றும் கூறினார்.
பதவிப் பறிப்பு மசோதாவில் பிரதமர் மோடி தன்னையும் இணைத்துள்ளார்: அமித் ஷா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.