வாக்குத் திருட்டைத் தொடர்ந்து ரேசன் அட்டையையும் நிலத்தையும் இழக்க நேரிடும் என்று பிகாரில் வாக்காளர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாஜக மீது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறதா? என்ற கோணத்திலும் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம் முஸாஃபர்பூரில் இன்று(ஆக. 27) நடைபெற்ற ‘வாக்குரிமைப் பேரணியில்’ பேசிய ராகுல் காந்தி: “2023-இல் வாக்குத் திருட்டு விவகாரத்தைக் குறித்து புரிந்து கொண்டதும், அதற்கான ஆதாரம் கிடைக்கப் பெற்றதும், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஒரு புதுச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, என்ன நடந்தாலும் சரி, தேர்தல் ஆணையர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதே.
தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டுமாயின், இந்தச் சட்டத்துக்கான அவசியம் ஏன் எழுகிறது?
காரணம் ஒன்றே ஒன்றுதான், இவர்கள்(தேர்தல் ஆணையம்) வாக்குத் திருட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உதவுகிறார்கள்.
வாக்குத் திருட்டு என்பது பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மற்றும் இந்தியாவின் ஏழை பொதுப்பிரிவு மக்கள் மீதான தாக்குதலே. வாக்கு இழக்கப்பட்ட பின், அதாவது வாக்குத் திருட்டைத் தொடர்ந்து, அடுத்ததாக ரேசன் அட்டையையும் நிலத்தையும் இழக்க நேரிடும்.
நீங்கள், அதாவது உங்களை அவமதிக்கும்போது, உங்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படாதபோது, உங்களுக்கு கல்வி வழங்கப்படாதபோது, இந்தியாவில் மீண்டும் சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலக்கட்டம் திரும்ப வரக்கூடும்!!” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “இன்று டிரம்ப் என்ன பேசியிருக்கிறார் தெரியுமா?
‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நான் தொலைபேசி வழியாக நரேந்திர மோடியிடம் பேசி சண்டையை நிறுத்தச் சொன்னேன். அதுவும் 24 மணி நேரத்தில் முடிவுகட்ட அறிவுறுத்தியிருந்தேன். அதனை ஏற்றுக்கொண்டு நரேந்திர மோடி சண்டை சச்சரவுகள் அனைத்தையும் 5 மணி நேரத்திலேயே நிறுத்திக் கொண்டார்.’
இந்தியாவில் ஊடகம் இப்போது நரேந்திர மோடி, அம்பானி, அதானிக்குச் சொந்தமாகிவிட்டது. தேஜஸ்விக்கோ, ஸ்டாலினுக்கோ, பழங்குடியினருக்கோ, தலித்களுக்கோ, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்காககோ ஊடகம் இல்லை.
அதானி, அம்பானி, டாடா, பிர்லா இவர்களில் யார் தலித், பழங்குடியினர் அல்லது பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடியுமா? அதேபோல, நீதிவியல் துறையிலும் பழங்குடியினரோ தலித்களோ பிற்படுத்தப்பட்டவர்களோ இல்லை.
தனியார் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் உரிமையாளர் பெயர்களை என்னிடம் தாருங்கள். அதிலும்கூட எந்தவொரு தலித் பிரிவினரும் இருக்கமாட்டார்.
ஆக மொத்தம், 90 சதவீத மக்கள் பிரிவினர் எதிலும் உள்ளடக்கப்படவில்லை.
அவர்கள்(ஆளும் கட்சி) வாக்குகளைத் திருடுகிறார்கள். காரணம், உங்கள் குரல் அவர்களுக்கு கேட்கும் அந்த ஒரு நாள் வரும் என்பதும் அவர்களுக்கு தெரியும், அப்போது இந்தியாவில் முழு மாற்றம் நடைபெறும்.
இதையடுத்து, நான் நரேந்திர மோடியிடம் நேருக்கு நேர் பேசும்போது என்ன் சொன்னேன் தெரியுமா? சாதிவாரிக் கணக்கெடுப்பு இந்தியாவில் நடைபெறும், அப்போது உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்றேன்” என ராகுல் காந்தி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.