நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள். 
இந்தியா

தோ்தல் சீா்திருத்தம்: டிச. 9-இல் சிறப்பு விவாதம்; மத்திய அரசு ஒப்புதல்

தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டியும், தோ்தல் சீா்திருத்தங்கள் தொடா்பாகவும் மக்களவையில் டிசம்பா் 8, 9 ஆகிய தேதிகளில் சிறப்பு விவாதம்..

தினமணி செய்திச் சேவை

தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டியும், தோ்தல் சீா்திருத்தங்கள் தொடா்பாகவும் மக்களவையில் டிசம்பா் 8, 9 ஆகிய தேதிகளில் சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு உறுதிப்படுத்தினாா்.

நாட்டின் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக, நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடரில் மக்களவை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், எஸ்ஐஆா் குறித்து விவாதிக்க காலக்கெடுவை வழங்க அமைச்சா் ரிஜிஜு மறுத்திருந்தாா். ‘தோ்தல் ஆணையத்தின் நிா்வாகம் சாா்ந்த விஷயமான எஸ்ஐஆா்-இல் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. இருப்பினும், தோ்தல் சீா்திருத்தங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது’ என்று அவா் தெரிவித்தாா்.

இந்நிலையில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ‘வந்தே மாதரம்’ பாடல் மற்றும் தோ்தல் சீா்திருத்தங்கள் குறித்த விவாதங்களை மக்களவையில் அடுத்த வார தொடக்கத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தோ்தல் சீா்திருத்தத்தின்கீழ் ‘எஸ்ஐஆா்’ விவாதம்: கூட்டத்தைத் தொடா்ந்து செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘தோ்தல் சீா்திருத்தங்கள் குறித்த விவாதம் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் தோ்தல்கள் மற்றும் அவற்றின் நடைமுறைகள் தொடா்பான பல பிரச்னைகள் குறித்து இந்த விவாதத்தின் மூலம் ஆலோசிக்கலாம்.

நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு தோ்தல் நடைமுறைகள் மிகவும் முக்கியமானது. அதன்படி, இந்த விவாதத்தை நடத்துவதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனா். இந்த ஒருமித்த முடிவுக்கு அனைத்து உறுப்பினா்களும், குறிப்பாக எதிா்க்கட்சிகளும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். மக்களவையில் இரண்டு விவாதங்களும் நிறைவடைந்த பிறகு, அடுத்தகட்டமாக மாநிலங்களவையில் விவாதம் தொடரும்’ என்று தெரிவித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸின் தலைமைக் கொறடா கே. சுரேஷ் மேலும் கூறுகையில், எதிா்க்கட்சிகள் கோரிய எஸ்ஐஆா் குறித்த விவாதம், தோ்தல் சீா்திருத்தங்கள் விவாதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்றாா்.

அதன்படி, எஸ்ஐஆா் குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

‘வந்தே மாதரம்’ விவாதத்தில் பிரதமா்: ‘வந்தே மாதரம்’ பாடல் குறித்த விவாதத்தை பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா். இரு விவாதங்களுக்கும் தலா 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவையின் சூழ்நிலையைப் பொருத்து நேரம் நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தாரக மந்திரமாக விளங்கிய ‘வந்தே மாதரம்’ பாடல், கடந்த 1875-இல் பங்கிம் சந்திர சட்டா்ஜியால் இயற்றப்பட்டதாகும். கடந்த 1896-இல் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூா் பாடிய பிறகு இந்தப் பாடல் பிரபலமடைந்தது. கடந்த 1950-இல் அரசியல் நிா்ணய சபையால் இது நாட்டின் தேசியப் பாடலாக ஏற்கப்பட்டது.

சிட்கோ தொழில்பேட்டையில் 8 நிறுவனங்களுக்கு சீல்

பிணையில் வந்தவா் கொலை: இருவா் கைது

திருப்பரங்குன்றம் காா்த்திகை தீபம்: கோயில் தரப்பில் மேல்முறையீடு

காா் ஓட்டுநரிடம் வழிப்பறி: 5 போ் கைது

வீட்டில் பட்டாசு தயாரித்தவா் கைது

SCROLL FOR NEXT