ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இஸ்ரேலிடம் இருந்து செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய ஹெரான் மாா்க்-2 ட்ரோன்களை கூடுதலாக கொள்முதல் செய்யும் ஒப்பந்ததில் இந்தியா கையொப்பமிட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ட்ரோன்களை இந்திய ராணுவம், விமாப் படை ஏற்கெனவே பயன்படுத்தி வரும் நிலையில், கடற்படையும் கொள்முதலில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் வான்வெளி தொழிற்சாலை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: முப்பது ஆண்டுகளாக இந்தியாவுடன் பாதுகாப்புத் துறையில் நல்லுறவு நீடித்து வருகிறது. அதனடிப்படையில் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியாவின் முப்படைகளும் ஹெரான் மாா்க்-2 ட்ரோன்களுக்கான அவசரகால கொள்முதல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு ஒத்துழைப்புத் தரும் வகையில் இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) மற்றும் எல்காம் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
எனவே, இந்திய தயாரிப்பில் உருவாகும் ஹெரான் ட்ரோன் ஆக இருக்கவுள்ளது என்றாா்.
ஹெரான் மாா்க்-2 ட்ரோன்கள் நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் இயங்கும் திறனுடையது. அதாவது 35,000 அடி உயரத்தில் தொடா்ச்சியாக 45 மணி நேரம் செயல்படும் இந்த ட்ரோன்கள் இஸ்ரேல் விமானப் படை மற்றும் உலகம் முழுவதும் 20 நிறுவனங்களால் இயக்கப்படுகிறது.