"கட்சி மேலிடம் முடிவு செய்யும்போது டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவார்' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
முதல்வர் பதவி தொடர்பான விவாதங்களுக்கு இடையே, கடந்த வாரம் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரை தனது இல்லத்துக்கு விருந்துக்கு அழைத்தார் முதல்வர் சித்தராமையா. அதன் அடுத்தகட்டமாக, பெங்களூரில் முதல்வர் சித்தராமையாவுக்கு தனது வீட்டில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் செவ்வாய்க்கிழமை காலை சிற்றுண்டி விருந்தளித்தார்.
முதல்வர் பதவி தொடர்பாக இருவருக்கும் இடையே நிலவும் கருத்து முரண்பாடுகளைக் களையும் நோக்கில் காங்கிரஸ் மேலிடம் அளித்த திட்டத்தின்படி இருவரும் பரஸ்பரம் விருந்தளித்து, தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாக வெளிப்படுத்தினர்.
முன்னதாக, பெங்களூரு, சதாசிவ நகரில் உள்ள வீட்டுக்கு வந்த முதல்வர் சித்தராமையாவை, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அவரது சகோதரரும் முன்னாள் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ், குனிகல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ எச்.டி.ரங்கநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
30 நிமிஷங்களுக்கு நீடித்த விருந்துடன் கூடிய கலந்துரையாடலில் முதல்வர் பதவி தொடர்பான விவாதமும் நடந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முதல்வர் சித்தராமையா கூறுகையில், "எங்கள் இருவருக்கும் இடையிலான இந்த ஒற்றுமை தொடரும். கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. அரசு நிர்வாகத்தை இணைந்தே நடத்திக்கொண்டிருக்கிறோம். எதிர்காலத்திலும் இருவரும் ஒன்றுசேர்ந்து அரசு நிர்வாகத்தை நடத்துவோம். இருவரும் கட்சி மேலிடத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர்கள். எங்களை அழைத்தால் தில்லிக்கு சென்று மேலிடத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவோம். எங்கள் இருவரையும் அழைத்துள்ள நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் கே.சி.வேணுகோபாலை சந்திக்க இருக்கிறேன். கட்சி மேலிடம் முடிவு செய்யும்போது டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவார்.
பெலகாவியில் டிச. 8-ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடரில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை, கர்நாடக அரசின் திட்டங்கள் பற்றி தில்லியில் கர்நாடக எம்.பி.க்களை சந்தித்து ஆய்வுக் கூட்டம் நடத்துவது உள்ளிட்டவை குறித்து இருவரும் பேசினோம்' என்றார் அவர்.
துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறோம். கட்சியில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. சட்டமேலவையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு நடக்கவிருக்கும் தேர்தல், அரசு நிர்வாகம் சார்ந்து விவாதித்தோம். 2028-இல் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் பேசினோம். மேலும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளை திறம்பட எதிர்கொள்வோம். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒரே குரலில் ஒலிப்பார்கள்' என்றார் அவர்.
பின்னர், விதான செளதா சென்ற முதல்வர் சித்தராமையா, அங்கிருந்து வெளியேறும்போது காங்கிரஸ் எம்எல்ஏ பேளூர் கோபாலகிருஷ்ணாவுடன் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த காணொலியில், முதல்வர் சித்தராமையா, "என்ன நடக்க இருக்கிறதோ, அது நடக்கட்டும். அரசியல் எனது தந்தையின் சொத்தா? அரசியல் நிரந்தரமானது அல்ல' என்று சித்தராமையா பேசியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.