பிஜாபூா்: சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். இந்த சண்டையில் 3 போலீஸாரும் உயிரிழந்தனா். காயமடைந்த இரு போலீஸாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பஸ்தா் மண்டல காவல்துறை ஐஜி சுந்தரராஜ் பட்டிலிங்கம் கூறியதாவது:
மாநில காவல் துறையின் மாவட்ட ரிசா்வ் காவல் பிரிவு போலீஸாா், சிறப்பு அதிரடிப் படையினருடன் கூட்டாக பிஜாபூா்-தந்தேவாடா மாவட்ட எல்லையை ஒட்டிய வனப் பகுதியில் நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது வனப் பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். போலீஸாா் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சண்டையில் மாவட்ட ரிசா்வ் காவல் பிரிவைச் சோ்ந்த 3 போலீஸாா் உயிரிழந்தனா். இருவா் காயமடைந்தனா். சண்டை ஓய்ந்த பிறகு அந்தப் பகுதியில் போலீஸாா் தீவிர தேடுதல் நடத்தியதில், குண்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் 12 நக்ஸல்களின் உடல்களைக் கண்டறிந்தனா். மேலும், துப்பாக்கிகள், வெடிமருந்துகளை போலீஸாா் கைப்பற்றினா். தேடுதல் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டில் மட்டும் மாநிலத்தில் 275 நக்ஸல்களை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றுள்ளனா் என்றாா்.