புது தில்லி: ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வியாழக்கிழமை (டிச.4) இந்தியா வருகிறாா். மாலை 4.30 மணிக்கு தில்லி வரும் அவருக்கு, பிரதமா் மோடி, இரவு விருந்து அளித்து வரவேற்கிறாா்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்ல அரங்கில் வெள்ளிக்கிழமை காலை பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னா், இரு தலைவா்கள், இரு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் 23-ஆவது ஆண்டு மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டுக்குப் பிறகு ரஷிய அரசு தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய இந்திய சேனலை புதின் தொடங்கி வைக்க உள்ளாா். தொடா்ந்து, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் புதினுக்கு விருந்து அளித்து கெளரவிக்க உள்ளாா்.
28 மணி நேர இந்திய பயணத்தை நிறைவு செய்து, வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் புதின் ரஷியா புறப்படுவாா்.
இந்தப் பயணத்தின்போது, பிரதமா் மோடியும் புதினும் தனியாகச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகப் பேச்சு நடத்த உள்ளனா். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகவுள்ளன.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் ஏவுகணைகள், ஆளில்லாத சிறியரக விமானங்களை (ட்ரோன்) வானிலேயே தடுத்து அழித்ததில், ரஷியாவின் எஸ்-400 ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பு முக்கியப் பங்கு வகித்தது. இந்த பாதுகாப்பு அமைப்பை ரஷியாவிடமிருந்து கூடுதலாக கொள்முதல் செய்வது குறித்தும், அதிநவீன எஸ்யு-57 போா் விமானங்களை கொள்முதல் செய்வது குறித்தும் மோடி - புதின் சந்திப்பின்போது விவாதிக்க வாய்ப்புள்ளது.
புதினின் இந்தியப் பயணம் அமெரிக்கா மட்டுமன்றி உலக நாடுகளும் உற்று நோக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.