ஜார்க்கண்ட் மாநிலத்தில், தன்பாத் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கசிந்த விஷவாயு தாக்கியதில் 2 பெண்கள் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்பாத் மாவட்டத்தின் கெண்டுவாடி பஸ்தி பகுதியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கடந்த 2 நாள்களாக கார்பன் மோனாக்ஸைட் எனும் விஷவாயு கசிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஷவாயு தாக்கியதில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு 20-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், ராஜ்புட் பஸ்தி, மஸ்ஜித் மொஹல்லா உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த 10,000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, விஷவாயு தாக்கியதில் பிரியங்கா தேவி என்ற பெண் நேற்று (டிச. 3) மாலை பலியான நிலையில், சிகிச்சை பெற்று வந்த லலிதா தேவி என்பவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, விஷவாயு பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பிசிசிஎல் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. மேலும், வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன், விஷவாயு கசிவிற்கு பிசிசிஎல் நிறுவனத்தின் அலட்சியமே காரணம் எனக் குற்றம்சாட்டி உள்ளூர்வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமெனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லியில் புதின்! அணிவகுப்பு மரியாதையுடன் ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் மோடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.