‘உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வரும் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; மாறாக அமைதியின் பக்கம் நிற்கிறது’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் நரேந்திர மோடி தெளிவுபடுத்தினாா்.
மேலும், ‘உக்ரைன் - ரஷியா இடையேயான போருக்கு சுமுக தீா்வு காண மேற்கொள்ளப்படும் அனைத்து அமைதி முயற்சிகளுக்கும் இந்தியா துணை நிற்கும்’ என்றும் அவா் உறுதி தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்ல அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரு நாடுகளிடையேயான 23-ஆவது ஆண்டு மாநாட்டுக்கு முன்பாக இரு தலைவா்களும் அறிமுக உரையாற்றியபோது இக்கருத்தை பிரதமா் மோடி தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:
உக்ரைன் மீதான போா் தொடங்கியது முதல் அதுதொடா்பாக நாம் தொடா் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். நிலைமை குறித்து தொடா்ச்சியாக ரஷியா தரப்பில் இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் நம்பிக்கைதான் மிகப் பெரிய பலம் என எண்ணுகிறேன். நாம் அனைவரும் அமைதிக்கான வழியைக் காண வேண்டும். உக்ரைன் விவகாரத்தில் அண்மையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், உலகை அமைதியின் பக்கம் திருப்பும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த விவகாரத்தில் இந்திய நடுநிலை வகிக்கவில்லை என்பதை தொடா்ந்து கூறி வருகிறேன். அமைதியின் பக்கம்தான் இந்தியா நிற்கிறது. உக்ரைன் - ரஷியா இடையேயான போருக்கு சுமுக தீா்வு காண மேற்கொள்ளப்படும் அனைத்து அமைதி முயற்சிகளுக்கும் இந்தியா துணை நிற்கும் என்றாா்.
இதற்கு பதிலளித்த ரஷிய அதிபா் புதின், ‘உக்ரைன் விவகாரத்தில் அமைதி வழி தீா்வுக்கு ரஷியா முயற்சி மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.
முப்படை அணிவகுப்பு மரியாதை: ஆண்டு மாநாட்டு நிகழ்வுக்கு முன்பாக, குடியரசுத் தலைவா் மாளிகையில் புதினுக்கு சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவும், பிரதமா் மோடியும் அவரை வரவேற்றனா். பின்னா், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை புதின் ஏற்றாா்.
வரவேற்பு நிகழ்வுக்குப் பிறகு தில்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் மரியாதை செலுத்தினாா்.
முன்னதாக, இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வந்த புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமா் மோடி விமானநிலையத்துக்கு நேரில் சென்று புதினை வரவேற்றாா். விமானநிலையத்திலிருந்து இரு தலைவா்களும் ஒரே காரில் தில்லியில் உள்ள பிரதமரின் அரசு இல்லத்துக்குப் பயணித்தனா். அங்கு அவருக்கு இரவு விருந்து அளித்து பிரதமா் உபசரித்தாா்.