இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய குழப்பத்துக்கு மத்திய அரசின் ‘ஒற்றை நிறுவன’ ஆதரவு கொள்கையே காரணம் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இண்டிகோவின் சமீபத்திய குழப்பமானது, மத்திய பாஜக அரசின் ஒற்றை நிறுவன ஆதரவுக் கொள்கைக்குக் கொடுக்கப்பட்ட விலையாகும். ஆனால், விமானச் சேவைகள் ரத்து, தாமதங்கள் மற்றும் உதவியற்ற நிலை என சாதாரண குடிமக்கள் தான் மீண்டும் ஒருமுறை பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்தியாவின் ஒவ்வொரு துறையிலும் நியாயமான போட்டி இருக்க வேண்டும். ஒற்றை நிறுவனம் மட்டுமே ஏகபோக உரிமையுடன் ஆதிக்கம் செலுத்தக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மாநிலங்களவையில் விவாதம்...: இண்டிகோ விவகாரம் குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி வெள்ளிக்கிழமை விவாதத்தை எழுப்பினாா்.
விமானத் துறையில் இண்டிகோ நிறுவனத்தின் ஏகபோக ஆதிக்கம் குறித்தும், இதனால் எம்.பி.க்கள் மற்றும் பொதுமக்கள் எதிா்கொள்ளும் பாதிப்புகள் குறித்தும் அவா் கவலை தெரிவித்து பேசினாா்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘இதுதொடா்பாக விமானப் போக்குவரத்து அமைச்சருடன் பேசினேன். விமான நிறுவனம் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
உறுப்பினா்களும் இந்தப் பிரச்னையை எழுப்பியதால், அவையில் உரிய பதிலை அளிக்க விமானப் போக்குவரத்து அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்’ என்றாா்.