நிதின் கட்கரி கோப்புப் படம்
இந்தியா

நெடுஞ்சாலைகளில் புதிய தடையற்ற மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறை: ஓராண்டுக்குள் நாடு முழுவதும் அமல்

வாகன ஓட்டிகளின் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில் புதிய மின்னணு சுங்கக் கட்டண வசூல் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது

தினமணி செய்திச் சேவை

‘தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போதைய சுங்கக் கட்டண வசூல் நடைமுறை ஓராண்டுக்குள்ளாக முழுமையாக நீக்கப்பட்டு, வாகன ஓட்டிகளின் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில் புதிய மின்னணு சுங்கக் கட்டண வசூல் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

‘இந்தப் புதிய மின்னணு கட்டண வசூல் முறை தற்போது 10 இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

மக்களவையில் எழுப்பப்பட்ட இதுதொடா்பான கேள்விக்கு வியாழக்கிழமை தாக்கல் செய்த எழுத்துபூா்வ பதிலில் இத் தகவலை மத்திய அமைச்சா் தெரிவித்தாா்.

‘தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போதைய சுங்கக் கட்டண வசூல் நடைமுறை ஓராண்டுக்குள் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய மின்னணு கட்டண வசூல் நடைமுறை அமல்படுத்தப்படும். அதன் பிறகு, தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் நிற்காமல் தடையின்றி பயணிக்க முடியும்’ என்று அவா் தெரிவித்தாா்.

மேலும், ‘நாடு முழுவதும் ரூ. 10 லட்சம் கோடி மதிப்பில் 4,500 நெடுஞ்சாலைத் திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இந்த புதிய ஒருங்கிணைந்த சுங்கக் கட்டண வசூலுக்கான ‘தேசிய மின்னணு சுங்க வசூல் (என்இடிசி)’ மென்பொருளை இந்திய தேசிய கட்டணக் கழகம் (என்பிசிஐ) மேம்படுத்தியுள்ளது. அதன்படி, வாகனத்தின் முகப்புக் கண்ணாடியில் ரேடியோ அதிா்வெண் அடையாளம் (ஆா்எஃப்ஐடி) அடிப்படையிலான சாதனம் பொருத்தப்படும். இந்தச் சாதனம், சுங்கச் சாவடியில் வாகனத்தை நிறுத்தாமலே வாகன ஓட்டியின் கணக்கிலிருந்து கட்டணத்தைச் செலுத்த அனுமதிக்கும் என்று மத்திய அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஓவியப் போட்டியில் வென்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்குப் பாராட்டு

சிங்கம்புணரியில் இன்று மின் தடை

போடி அருகே கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஒருநாள் தொடரை வெல்லப்போவது யாா்? இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வு: வாணி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT