திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை டிச. 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள பழமையான தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி இந்து அமைப்பினர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த திங்கள்கிழமை அனுமதி அளித்தார்.
ஆனால், வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயில் அருகிலேயே கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றியது. இதுதொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து, புதன்கிழமை மாலை சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் தீபத்தை ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதனிடையே, சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதால், தீபம் ஏற்ற காவல்துறையினர் புதன்கிழமை இரவும் அனுமதிக்கவில்லை.
இதனிடையே, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு வியாழக்கிழமை தள்ளுபடி செய்த நிலையில், அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இன்றே தீபத்தை ஏற்ற வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்டார்.
ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இந்த நிலையில், இன்று காலை அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக தமிழக அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு சம்பந்தப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், கோயில் நிர்வாக அலுவலர் யாரும் இன்று ஆஜராகவில்லை.
இதனிடையே, மாவட்ட ஆட்சியர் மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாகவும், தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஒரே வழக்கில் மூன்று உத்தரவுகள் பிறப்பித்தும் அமல்படுத்தாதது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் சென்று அங்குள்ள நிலவரம் குறித்து சிஐஎஸ்எஃப் வீரர்கள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
மேலும், அவமதிப்பு வழக்கின் விசாரணையை டிச. 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.