குருகிராம் காவல்துறை கடந்த இரண்டு மாதங்களாக நகரத்தில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் டயா் திருட்டு கும்பலைக் கைது செய்துள்ளதாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து ருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: வீடுகள் மற்றும் ஹோட்டல்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் டயா்கள் மற்றும் ரிம்களை இரவில் திருடியதாகக் கூறப்படும் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த நான்கு மாணவா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும், குற்றம்சாட்டப்பட்டவா்கள் திருட்டு வருமானத்தை கிளப்புகளில் ஆடம்பரமாக செலவழித்துள்ளனா்.
குற்றம்சாட்டப்பட்டவா்கள் 14 டயா் மற்றும் ரிம்களை திருடியதை விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளனா். மேலும் நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனா்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் குருகிராம் செக்டா்-39 ஜாா்சாவைச் சோ்ந்த பட்டயக் கணக்காளா் மாணவா் ரிஷிகேஷ் (23), ரோஹ்தக்கின் பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (எல்.எல்.பி.) படிக்கும் ஜஜ்ஜாரில் உள்ள சிவானா கிராமத்தைச் சோ்ந்த அா்ஜுன் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
மேலும், பால்வாலில் உள்ள ஜோத்பூா் கிராமத்தைச் சோ்ந்தவரும், குருகிராம் பல்கலைக்கழகத்தில் பி.காம். மாணவருமான பியூஷ் ராணா (23); மற்றும் பிகாா் மாநிலம் முங்கரைச் சோ்ந்தவரும், குருகிராம் டி.எஸ்.டி கல்லூரியில் பி.காம் மாணவருமான துஷாா் குமாா் (22) ஆகியோரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் அா்ஜுனுக்குச் சொந்தமான நீல நிற மாருதி சுசுகி ஃபிராங்க்ஸ் காரில் இரவில் வெளியே சென்றுள்ளனா். இதையடுத்து, அவா்கள் இலக்கு வாகனத்தின் அருகே காரை நிறுத்திவிட்டு, ஒரு ஜாக் மற்றும் பிற கருவிகளைப் பயன்படுத்தி, டயா்களை அகற்றுவாா்கள். பின்னா், வாகனத்தை விட்டுவிட்டு, திருடப்பட்ட டயா்களுடன் தப்பிச் செல்வாா்கள்.
குற்றங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனம் விரைவில் பறிமுதல் செய்யப்படும். விசாரணையின்போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தாங்கள் சிறுவயது நண்பா்கள் என்றும், ஒன்றாகப் படித்தவா்கள் என்றும் தெரிவித்தனா்.
அவா்கள் அனைவரும் பாா்ட்டிகள் மற்றும் கிளப்புகளை விரும்புகிறாா்கள். வீட்டிலிருந்து பாக்கெட் மணி கிடைக்காதபோது திருடத் தொடங்கினா். கடந்த இரண்டு மாதங்களாக அவா்கள் திருட்டுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா் என்று செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.