வடக்கு கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் நேற்று உயிரிழந்துள்ளதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
கேரளத்தில் டிசம்பர் 9, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக அந்த மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார்.
அதன்படி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 9 (நாளை) தேர்தல் நடைபெறுகிறது.
இரண்டாம் கட்டமாக திருச்சூர், மலப்புரம், வயநாடு, பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 11ல் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில்,மலப்புரம் மூத்தேடம் கிராம பஞ்சாயத்தில் உள்ள பயிம்படம் என்ற 7வது வார்டில் போட்டியிடும் வட்டத் ஹசீனா என்ற பெண் வேட்பாளர் திடீரென உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அங்கன்வாடி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஹசீனா. இவர் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், வீடு திரும்பிய வேட்பாளர் ஹசீனாவுக்கு திடீரென அசௌகரியம் ஏற்பட்டது. நெஞ்சு வலி காரணமாக மயங்கி விழுந்தார். உடனே, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மலப்புரம் தொகுதியில் போட்டியிடும் பெண் வேட்பாளர் தேர்தலுக்கு முன்னதாக உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் முக்கியமான உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏழு மாவட்டங்களில் மலப்புரம் ஒன்றாகும். முதல் கட்டத் தேர்தல் செவ்வாய்க்கிழமை (நாளை) நடைபெறுகிறது.
இதையும் படிக்க: மக்களவையில் நாளை எஸ்ஐஆர் விவாதம்! ராகுல் தொடக்கி வைக்கிறார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.