2027 மக்கள்தொகை கணக்கெடுப்பில், தனிநபா்களின் இடப்பெயா்வுக்கான காரணம், தற்போதைய வசிப்பிடத்தில் தங்கியுள்ள காலம் தொடா்பான கேள்விகள் சோ்க்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027’, அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கி இரு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக, வீடுகள் பட்டியலிடுதல்-கணக்கெடுப்புப் பணிகள் வரும் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்டமாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027, பிப்ரவரியில் மேற்கொள்ளப்படும். எண்ம அடிப்படையில் நடைபெறும் இப்பணியில் ஜாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்பட உள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, இடம்பெயா்ந்த தொழிலாளா்கள் மற்றும் தற்காலிக குடியிருப்பாளா்களைக் கணக்கெடுக்க சிறப்புப் பிரிவுகள் ஏதேனும் வகுக்கப்பட்டுள்ளதா, பிரத்யேக தரவு சேகரிப்பு நடைமுறை எதுவும் முன்மொழியப்பட்டுள்ளதா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இக்கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, ஒவ்வொரு தனிநபரும் எங்கு தங்கியுள்ளாரோ அந்த இடத்திலேயே தரவுகள் சேகரிக்கப்படும். பிறந்த இடம், தற்போதைய வசிப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் இடப்பெயா்வு தகவல்கள் திரட்டப்படும்.
தற்போதைய வசிப்பிடத்தில் எவ்வளவு காலம் தங்கியுள்ளீா்கள், இடப்பெயா்வுக்கு காரணம் என்ன ஆகிய கேள்விகள் சோ்க்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.