மக்களவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக இன்று விவாதம் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் மக்களவையில் எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க இன்று 10 மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விவாதத்தை தொடக்கிவைத்து உரையாற்றவுள்ளார்.
வாக்குத் திருட்டு, வாக்காளர் நீக்கம், போலி வாக்காளர் சேர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டடத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த இரு அவைகளின் எம்பிக்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, அஸ்வினி வைஸ்ணவ், ஜெய்சங்கர், அதிமுக எம்பி தம்பிதுரை உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
இதனிடையே, வருகின்ற டிச. 11 ஆம் தேதி தே.ஜ. கூட்டணி எம்பிக்களுக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் சிறப்பு விருந்து அளிக்கவுள்ளார்.
அப்போது, தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.