புது தில்லி: நாட்டில் ஒரு மாநிலம், சநாதனத்துக்கு எதிரான மாநிலமாக மாறி வருகிறது என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து மக்களவையில் அனுராக் தாக்கூர் பேசியுள்ளார்.
இவரது பேச்சுக்கு மக்களவை திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
மக்களவையில் இன்று பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேசுகையில், இந்த அவையில் ஒரு முக்கிய விவகாரத்தை எழுப்ப விரும்புகிறேன். நாட்டில் ஒரு மாநிலம் சநாதனத்துக்கு எதிரான மாநிலமாக மாறி வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள். சநாதனத்துக்கு எதிராக அறிக்கை வெளியிடுகிறார்கள். கோயிலுக்குச் செல்வதற்கு, பக்தர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தீபம் ஏற்ற கோயிலுக்குச் சென்றால், அங்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தீபம் ஏற்ற நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது.
தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடுமையான விமர்சனத்தையும் முன் வைத்துள்ளது. அதற்காகப் போராடிய ஹிந்து பக்தர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.
அங்கு நீதிமன்ற அவமதிப்பு நடந்துள்ளது. ஏன் ஒரு ஹிந்துக் கோயிலில், பக்தர்களை தீபம் ஏற்ற அரசு அனுமதிக்கவில்லை என்று கூறினார்.
அனுராக் தாக்கூர் இவ்வாறு பேசியபோது, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக எம்.பி.க்கள் அவையின் முன் பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினர். இதனால், அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் பலனளிக்காததால் அவை சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டு பிறகு கூடியது.
இதையும் படிக்க... பல்லாயிரம் கிளிகளுக்கு உணவளித்த சேகர் காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.