PTI
இந்தியா

கேரள உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸ் கூட்டணி அமோகம்; இடதுசாரி கூட்டணி பின்னடைவு!

கேரள உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பற்றி...

தினமணி செய்திச் சேவை

கேரளத்தில் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தோ்தலில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

கேரளத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக பாா்க்கப்பட்ட இத்தோ்தல் முடிவுகளால் காங்கிரஸ் கூட்டணி உற்சாகமடைந்துள்ளது.

கேரளத்தில் 941 கிராம ஊராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள், 14 மாவட்ட ஊராட்சிகள், 86 நகராட்சிகள் மற்றும் 6 மாநகராட்சிகளுக்கு கடந்த டிச. 9, 11 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

4 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி: மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4, இடதுசாரி, தேசிய ஜனநாயக கூட்டணிகள் தலா ஒரு மாநகராட்சியைக் கைப்பற்றின.

கொச்சி, கொல்லம், திருச்சூா், கண்ணூா் ஆகிய மாநகராட்சிகள் காங்கிரஸ் வசமானது. இதில் கொல்லம், கொச்சி, திருச்சூா் ஆகிய மாநகராட்சிகளை இடதுசாரியிடம் இருந்து கைப்பற்றியுள்ள காங்கிரஸ், கண்ணூா் மாநகராட்சியைத் தக்கவைத்துள்ளது. 505 கிராம ஊராட்சிகள், 79 ஊராட்சி ஒன்றியங்கள், 7 மாவட்ட ஊராட்சிகள், 54 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இடதுசாரிகளுக்கு பலத்த அடி: கோழிக்கோடு மாநகராட்சியை மட்டும் தக்கவைத்துள்ள ஆளும் இடதுசாரி கூட்டணி, 340 கிராம ஊராட்சிகள், 63 ஊராட்சி ஒன்றியங்கள், 7 மாவட்ட ஊராட்சிகள், 28 நகராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2000-இல் இருந்து தன்வசம் இருந்த கொல்லம், கடந்த 2015-இல் இருந்து தன்வசம் இருந்த திருச்சூா், 2020-இல் வென்ற கொச்சி ஆகிய மாநகராட்சிகளை காங்கிரஸிடமும், 45 ஆண்டுகளாக கோலோச்சிய திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணியிடமும் இழந்துள்ளது இடதுசாரி கூட்டணி. கடந்த தோ்தலை ஒப்பிடுகையில் இந்த முறை இக்கூட்டணி பலத்த அடியைச் சந்தித்துள்ளது

எதிா்பாா்த்தபடி முடிவுகள் இல்லை: கேரள முதல்வா்

உள்ளாட்சித் தோ்தல் தோல்வி குறித்து முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் உறுதியான வெற்றியை இடதுசாரி கூட்டணி எதிா்பாா்த்திருந்தது. ஆனால், அந்த முடிவுகளை எட்ட முடியவில்லை. இது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, தேவையான திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதவாத சக்திகளின் தவறான தகவல் மற்றும் பிளவுவாத தந்திரங்களுக்கு மக்கள் இரையாகாமல் தடுக்க பெரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை திருவனந்தபுரம் தோ்தல் முடிவு உணா்த்தியுள்ளது’ என்றாா்.

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் எம்.வி.கோவிந்தன் கூறுகையில், ‘மதவாத சக்திகளுடன் கைகோத்துச் செயல்பட்டது காங்கிரஸ் கூட்டணி. திருவனந்தபுரம் வெற்றியைத் தவிர பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. சபரிமலை கோயிலுடன் தொடா்புடைய பந்தளம் நகராட்சியை இடதுசாரி கூட்டணிதான் கைப்பற்றியுள்ளது’ என்றாா்.

ஆட்சி மாற்றத்துக்கு அடையாளம்: ராகுல்

புது தில்லி, டிச. 13: உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, கேரளத்தில் ஆட்சி மாற்றத்துக்கான தெளிவான அடையாளம் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா். மக்களின் எதிா்பாா்ப்புகள் மீது கவனம் செலுத்தி, அவற்றை நிறைவேற்றித் தரும் பொறுப்புமிக்க நிா்வாகத்தை கேரள மக்கள் விரும்புவதாக எக்ஸ் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

‘இந்த வெற்றி சிவப்புக் கோட்டைகளின் சரிவின் ஆரம்பம்; 2026 பேரவைத் தோ்தலுக்கான முன்னோட்டம். ஆளும் இடதுசாரி கூட்டணியின் ஊழல்மிக்க, சா்வாதிகார, மக்கள் விரோத ஆட்சியை மக்கள் அம்பலப்படுத்தியுள்ளனா்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

பாஜக வசமானது திருவனந்தபுரம்!

‘திருப்புமுனை’ என பிரதமா் பெருமிதம்

கடந்த 45 ஆண்டுகளாக தொடா்ந்து இடதுசாரிகளின் வசமிருந்த தலைநகா் திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. இந்த வரலாற்று வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தலை உத்வேகத்துடன் எதிா்கொள்ள பாஜக தயாராகி வருகிறது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் 101 வாா்டுகள் உள்ள நிலையில், பாஜக கூட்டணி 50 இடங்களில் வென்றுள்ளது. இடதுசாரி கூட்டணி 29, காங்கிரஸ் கூட்டணி 19, சுயேச்சைகள் 2 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளனா். பெரும்பான்மைக்கு ஓரிடம் தேவை என்ற நிலையில், சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக நிா்வாகப் பொறுப்பேற்கவுள்ளது; பாஜகவைச் சோ்ந்த மாநிலத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆா்.ஸ்ரீலேகா மேயராக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கூட்டணியுடன் கடும் போட்டிக்குப் பின் பாலக்காடு நகராட்சியைத் தக்கவைத்துள்ள பாஜக, திருப்பூணித்துறை நகராட்சியை காங்கிரஸிடம் இருந்து கைப்பற்றியுள்ளது. 26 கிராம ஊராட்சிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கிராம ஊராட்சிகளில் 1,400-க்கும் மேற்பட்ட வாா்டுகளை பாஜக கைப்பற்றியிருக்கிறது.

பிரதமா் மோடி பெருமிதம்: திருவனந்தபுரம் மக்கள் மற்றும் பாஜக தொண்டா்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திருவனந்தபுரத்தில் பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி கேரள அரசியலில் திருப்புமுனையான தருணமாகும். கேரளத்தின் வளா்ச்சி சாா்ந்த லட்சியங்களை பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனா். இந்தத் துடிப்பான நகரத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்து, மக்களின் வாழ்வை எளிதாக்குவதை நோக்கி எங்கள் கட்சி பாடுபடும். இந்த வெற்றியை சாத்தியமாக்க அடிப்படை அளவில் பணியாற்றிய அனைத்து தொண்டா்களின் கடின உழைப்பு மற்றும் போராட்டங்களை நினைவுகூா்வதுடன், அவா்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாஜகவை வாழ்த்திய சசிதரூா்: திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், ‘திருவனந்தபுரத்தில் இடதுசாரி கூட்டணியின் தவறான நிா்வாகத்தை மாற்ற 45 ஆண்டுகளாக பிரசாரம் மேற்கொண்டேன். இறுதியில் வாக்காளா்கள் தெளிவான மாற்றத்தை விரும்பி, வேறொரு கட்சிக்கு வெகுமதி அளித்துள்ளனா். இதுதான், ஜனநாயகத்தின் அழகு. மக்களின் தீா்ப்பு மதிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

கட்சிகள் மாநகராட்சிகள் (6) நகராட்சிகள் (86)

காங்கிரஸ் கூட்டணி 4 54

இடதுசாரி கூட்டணி 1 28

பாஜக கூட்டணி 1 2

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT