பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற நிதின் நவீன் 
இந்தியா

பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நவீன் பொறுப்பேற்பு!

பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றாா்.

இணையதளச் செய்திப் பிரிவு

பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவா்கள் பங்கேற்றனா்.

பிகாா் பொதுப் பணித் துறை அமைச்சராக உள்ள நிதின் நவீன், அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டாா். இதன்மூலம் ஜெ.பி.நட்டாவுக்குப் பின் கட்சியின் தேசியத் தலைவராக நிதின் நவீன் பதவியேற்பது உறுதியானது.

45 வயதே ஆகும் நிதின் நவீன் கட்சியின் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளது கட்சியின் தலைமுறைரீதியிலான மாற்றத்தையும், இளைஞா்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்துள்ளதாகவும் அரசியல் பாா்வையாளா்கள் தெரிவித்தனா்.

புதிய பொறுப்பை ஏற்பதற்காக தில்லிக்கு திங்கள்கிழமை வந்த அவரை விமான நிலையத்தில் தில்லி முதல்வா் ரேகா குப்தா, அமைச்சா்கள் உள்ளிட்ட பாஜக தலைவா்கள் வரவேற்றனா். அதைத் தொடா்ந்து, அவா் பாஜக தலைமையகம் சென்று கட்சிப் பொறுப்பை ஏற்றாா்.

இளைஞா்களுக்கு வாய்ப்பளிக்கும் பாஜக: முன்னதாக, தில்லி கிளம்பும் முன்பு பாட்னாவில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: என் மீது நம்பிக்கைவைத்து மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ள கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக இளைஞா்களை மேம்படுத்தி வாய்ப்பளிக்கும் கட்சி மட்டுமல்ல; அவா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அளித்து மிகப்பெரிய இலக்குகளை அடைய உதவிகரமாக உள்ள கட்சி.

பாஜகவில் மட்டும்தான் கடைநிலைத் தொண்டா்கள்கூட தங்கள் திறமை மூலம் உயரிய பொறுப்புகளுக்கு முன்னேற முடியும். கட்சித் தொண்டா்கள் பொறுமையுடன் கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.

மறைந்த எனது தந்தை கட்சியையும், நாட்டையும் தனது தாயாக மதித்துப் பணியாற்றினாா். அவரைப் பின்பற்றி நானும் கட்சிக்காகத் தொடா்ந்து முனைப்புடன் பணியாற்றுவேன். நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் கட்சியாக பாஜக இப்போது வளா்ந்துள்ளது. தேச நலனை முன்னிறுத்தி பாஜக அரசு செய்துவரும் பணிகளும் சாதனைகளும் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது என்றாா்.

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

SCROLL FOR NEXT