பாஜக கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாஜக தேசிய தலைவராக தற்போதுள்ள மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா, கடந்த 2020, ஜனவரியில் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஜெ.பி. நட்டாவின் மூன்றாண்டு பதவிக் காலம் ஏற்கெனவே நிறைவுற்ற பிறகும் கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அப்பதவியில் நீடித்து வந்தார்.
இதையடுத்து, பாஜகவின் புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஜன. 19) மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நிதின் நவீனைத் தவிர வேறு எவரும் அக்கட்சியின் உச்சபட்ச பதவிக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து, நிதின் நவீனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐந்து முறை பிகார் சட்டப்பேரவை உறுப்பினரான நிதின் நவீன் பாஜக தேசிய தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முக்கிய மாநிலத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், பாஜக தனது செல்வாக்கை மேலும் விரிவுபடுத்த முயலும் இந்த நேரத்தில், கட்சியின் உயரிய பதவியை வகிக்கும் மிக இளைய தலைவர் இவர் ஆவார்.
பாஜக முந்தைய தலைவர் ஜெ.பி. நட்டா தனது பொறுப்புகளை புதிய தலைவர் நிதின் நவீனிடம் ஒப்படைத்தார்.
பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்பட கட்சி மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, இன்று காலை பாஜக புதிய தலைவராகப் பதவியேற்ற நிதின் நவீன், தில்லியில் உள்ள பல்வேறு கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.
தில்லி மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா, தில்லி அமைச்சர்களான பர்வேஷ் சாஹிப் சிங், மஞ்சிந்தர் சிங் சிர்சா உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் சென்ற நிதின் நவீன் முதலில் ஜண்டேவாலா கோயிலில் பிரார்த்தனை செய்தார்.
பின்னர், மந்திர் மார்க்கில் உள்ள வால்மீகி கோயில், கன்னாட் பிளேஸில் உள்ள அனுமன் கோயில் மற்றும் தில்லியில் உள்ள குருத்வாரா ஆகிய இடங்களுக்கும் சென்று வழிபாடு செய்ததாக பாஜக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.