புது தில்லி: பொதுத் துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசி (இந்திய ஆயுள் காப்பீடுக் கழகம்) டாடா குழுமம், ஹெசிடிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், அதானி குழுமங்களில் அதிக முதலீடுகளைச் செய்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:
எல்ஐசி நிறுவனம் அதிகபட்சமாக டாடா குழுமத்தில் ரூ. 88,404 கோடியை முதலீடு செய்துள்ளது. இதற்கு அடுத்ததாக ஹெச்டிஎஃப்சி வங்கி (ரூ. 80,843 கோடி), ரிலையன் குழுமம் (ரூ.60,065.56 கோடி), அதானி குழுமம் (ரூ. 47,633.78 கோடி) எஸ்பிஐ (ரூ.46,621.76 கோடி) நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
இவை தவிர 35 உள்நாட்டு நிறுவனங்கள் அல்லது குழுமங்களில் தலா ரூ. 5,000 கோடி அளவுக்கு எல்ஐசி முதலீடு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ. 7.87 லட்சம் கோடி அளவில் எல்ஐசி இந்த நிறுவனங்களில் முதலீடுகளைச் செய்துள்ளது. எல்ஐசி வாரியம் அனுமதித்துள்ள முதலீடு கொள்கையின் அடிப்படையில் இந்த முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
விவசாய கடன் ரத்து இல்லை: மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘விவசாயக் கடன்களை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் தற்போதைக்கு இல்லை’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.