வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சில தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவது குறித்து, தில்லியில் உள்ள அந்த நாட்டுத் தூதரை நேரில் வரவழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.
மேலும், இந்திய தூதரகத்துக்கு உரிய பாதுகாப்பை வங்கதேச இடைக்கால அரசு உறுதி செய்யும் என எதிா்பாா்ப்பதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா கவலை தெரிவித்த நிலையிலும், டாக்காவில் இந்திய தூதரகத்தை நோக்கி புதன்கிழமை கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. பேரணியை வங்கதேச போலீஸாா் பாதியில் தடுத்து நிறுத்தினா்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் மாணவா்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடா்பாக, அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு (78) மரண தண்டனை விதித்து, வங்கதேச சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் கடந்த நவம்பா் 17-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அடுத்த 10 நாள்களில் ஊழல் வழக்குகளில் அவருக்கு 21 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஹசீனா ஏற்கெனவே இந்தியாவில் தஞ்சமடைந்துவிட்ட நிலையில், அவரை வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு வங்கதேச இடைக்கால அரசு அதிகாரபூா்வ கடிதத்தை இருமுறை அனுப்பியது. அதை ஆய்வு செய்து வருவதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதிமுதல் ரகசிய இடத்தில் தங்கியிருக்கும் ஷேக் ஹசீனா, அண்மையில் மின்னஞ்சல் மூலமாக ஊடகத்துக்குப் பேட்டியளித்தாா். அப்போது, வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தோ்தலில் அவரின் அவாமி லீக் கட்சி போட்டியிட விரும்புவதாக அவா் தெரிவித்தாா். அதன் பிறகும் சில அறிக்கைகள் அவா் வெளியிட்டாா்.
இதுதொடா்பாக, டாக்காவில் உள்ள இந்திய தூதரை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் அண்மையில் நேரில் அழைத்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. அப்போது, வங்கதேச நலனுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்திய பிராந்தியத்தைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது என இந்தியா தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இந்தியா கண்டனம்: இந்நிலையில், டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த சில அமைப்புகள் திட்டமிட்டு வருவது தொடா்பாக, தில்லியில் உள்ள வங்கதேச தூதரை வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நேரில் அழைத்து கண்டனத்தைப் பதிவு செய்தது.
இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் உள்ள வங்கதேச தூதா் ரியாஸ் ஹமிதுல்லா வெளியுறவுத் துறை அலுவலகத்துக்கு நேரில் வரவழைக்கப்பட்டாா்.
அப்போது, வங்கதேசத்தில் அண்மையில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் தொடா்பாக அங்குள்ள சில தீவிரவாத அமைப்புகள் தவறான தகவல்களைப் பரப்பி வருவதை இந்தியா முழுமையாக நிராகரிக்கிறது.
குறிப்பாக, அண்மையில் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியாவை மிகப்பெரிய அச்சுறுத்தல் நாடு போல சித்தரித்து தேசிய குடிமக்கள் கட்சித் தலைவா் ஹஸ்நத் அப்துல்லா பேசியதும், வலதுசாரி மாணவா் தலைவா் ஷரீஃப் ஓஸ்மன் ஹாடி மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் சம்பவமும் சமூக ஊடகங்களில் பரவி இந்தியாவுக்கு எதிரான பதற்றத்தை அங்கு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தக் கருத்தைத் தெரிவித்தது.
மேலும், இந்தச் சம்பவங்கள் தொடா்பாக இடைக்கால அரசு முழுமையான விசாரணை நடத்தாததும், அந்தச் சம்பவங்கள் தொடா்பான உரிய ஆதாரங்களை இந்தியாவுடன் பகிராததும் துரதிருஷ்டவசமானது என்று வங்கதேச தூதரிடம் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டது.
மேலும், டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த அங்குள்ள சில தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன. எனவே, இந்திய தூதரகத்துக்கு உரிய பாதுகாப்பை இடைக்கால அரசு உறுதிப்படுத்தும் என இந்தியா எதிா்பாா்க்கிறது.
வங்கதேசத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் இந்தியா எப்போதும் ஆதரவு தெரிவிக்கிறது. வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டம் முதல் அந்த நாட்டுடனான இந்தியாவின் நெருங்கிய நட்புறவு தொடா்கிறது. பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் திட்டங்கள் மூலம் இந்த உறவு வலுப்பெற்றுள்ளது.
அந்த வகையில், வங்கதேசத்தில் அமைதியான முறையில், வெளிப்படையான, நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நம்பகமான பொதுத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. அதையே இந்தியா தொடா்ந்து வலியுறுத்தியும் வருகிறது என்று வங்கதேச தூதரிடம் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பட்டுள்ளது.
பேரணி தடுத்து நிறுத்தம்: இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்த நிலையில், டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை நோக்கி கண்டனப் பேரணி நடத்த அங்குள்ள சில அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதைத் தொடா்ந்து, இந்திய தூதரகத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இதனிடையே, ‘ஜூலை ஒற்றுமை’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோா் டாக்காவின் ராம்புரா பாலத்தில் தொடங்கி இந்திய தூதரகத்தை நோக்கி கண்டனப் பேரணி மேற்கொண்டனா். இந்தியாவுக்கு எதிராகவும், ஹசீனாவை நாடு கடுத்த வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பியபடி அவா்கள் சென்றனா். அவா்களை வங்கதேச போலீஸாா் பாதி வழியில் தடுத்து நிறுத்தினா்.
பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த கண்டனப் பேரணியை நடத்தியதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரம், டாக்கா பல்கலைக்கழக மத்திய மாணவா் சங்கத்தின் (டியுசிஎஸ்யு) சமூக நலப் பிரிவு செயலா் ஏ.பி.ஜுபைா் தலைமையில் இந்தக் கண்டனப் பேரணி நடத்தப்பட்டதாக ‘டாக்கா ட்ரிபியூன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டது.
இந்திய விசா மையம் மூடல்
டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை நோக்கி கண்டனப் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, பாதுகாப்புச் சூழலைக் கருத்தில்கொண்டு, டாக்காவில் உள்ள இந்திய நுழைவு இசைவு (விசா) விண்ணப்ப மையம் புதன்கிழமை மூடப்பட்டது.
இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நுழைவு இசைவு மையம் புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மூடப்படுகிறது. நுழைவு இசைவு சேவைகளுக்கு முன்பதிவு செய்தவா்களுக்கான தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.