‘நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை ஏற்க தில்லி நீதிமன்றம் மறுத்ததன் மூலம், மத்திய அரசின் பழிவாங்கும் அரசியல் அம்பலப்பட்டுவிட்டது. பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பதவி விலக வேண்டும்’ என காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.
நேஷனல் ஹெரால்ட் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, அவரது மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்க மறுத்து கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
‘பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்த அடிப்படை தேவையான முதல் தகவல் அறிக்கை அல்லாமல், ஒரு தனிநபரின் புகாரை அடிப்படையாகக் கொண்டு, அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளது. எனவே, இதைச் சட்டப்படி அனுமதிக்க முடியாது’ என்று தனது உத்தரவில் குறிப்பிட்டாா்.
இந்நிலையில், தில்லி நீதிமன்ற உத்தரவு குறித்து செய்தியாளா்களிடம் பேசிய காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘இந்த உத்தரவானது பிரதமா் மோடி, அமைச்சா் அமித் ஷாவின் முகத்தில் விழுந்த அடி போன்றது. முதல் தகவல் அறிக்கைகூட இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதே சட்டவிரோதமானது. இவ்வாறு மக்களைத் துன்புறுத்தியதற்காக மோடியும், அமித் ஷாவும் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இத்தகைய அடக்குமுறைகளை மக்கள் இனி பொறுத்துக்கொள்ள மாட்டாா்கள்.
கடந்த 11 ஆண்டுகளில் சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை மூலம் 50-க்கும் மேற்பட்ட எதிா்க்கட்சித் தலைவா்களை மோடி அரசு மிரட்ட முயற்சித்தது. அதில் ஒரு பகுதியாகவே காங்கிரஸ் தலைவா்களுக்கும் அழுத்தம் தரப்பட்டது. இதற்கு எதிராக நாங்கள் அரசியல் ரீதியான போராட்டத்தை முன்னெடுத்தோம்.
காங்கிரஸின் மூத்த தலைவா்களுக்கு எதிராக மோடி அரசு கட்டவிழ்த்த பொய்க் குற்றச்சாட்டுகள் மற்றும் சதியை தில்லி நீதிமன்ற உத்தரவு அம்பலப்படுத்தியுள்ளது. எங்களின் போராட்டம் நாடாளுமன்றத்திலும், வீதிகளிலும் தொடரும். ஆளுங்கட்சியினருக்குத் தக்க பாடம் புகட்டுவோம்’ எனத் தெரிவித்தாா்.
நாடு தழுவிய போராட்டம்: காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் பேசுகையில், ‘பாஜகவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளால் காங்கிரஸ் தொண்டா்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனா்.
புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் மத்திய பாஜக அரசின் போக்கை மக்களிடம் அம்பலப்படுத்த, காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்’ என்றாா்.
‘உரக்க ஒலித்த சட்டத்தின் குரல்’....: காங்கிரஸை சோ்ந்த மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி கூறுகையில், ‘சட்டத்தின் குரல் இப்போது உரக்க ஒலித்துள்ளது. 2014 முதல் 2021 வரை இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி வந்த அதிகாரிகள், மேலிடத்து உத்தரவு வந்தவுடன் விசாரணையைத் தொடங்கினா்.
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை 90 மணி நேரத்துக்கும் மேல் விசாரித்து அலைக்கழித்தனா். ஒரு ரூபாய்கூட கைமாறாத ஒரு வழக்கில் பண முறைகேடு புகாா் கூறியது வேடிக்கையானது. நீதிமன்றங்கள் அரசியல் நாடகம் நடத்தும் இடம் அல்ல என்பதை இந்த உத்தரவு உறுதி செய்துள்ளது’ என்றாா்.
இந்தச் செய்தியாளா் சந்திப்பில் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகளும் கலந்துகொண்டனா்.
‘பொய்ப் பிரசாரத்தில் காங்கிரஸ்’
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் தில்லி விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து காங்கிரஸ் தவறான தகவல்களைப் பரப்பி, பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா செய்தியாளா்களிடம் கூறியதாவது: நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளதே தவிர, வழக்கைத் தள்ளுபடி செய்யவில்லை.
முறையான முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படாத தனிநபா் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், தற்போது நீதிமன்றம் இதை ஏற்கவில்லை. அதேநேரம், இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை தனது விசாரணையைத் தொடரலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இன்னும் தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களாக நீடிக்கின்றனா். பொய்ப் பிரச்சாரம் செய்வதையே காங்கிரஸ் வழக்கமாகக் கொண்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.