இளம் வயதினரை நாட்டின் வளா்ச்சிக்கு தயாா்படுத்த தரமான உயா்கல்வி அவசியம் என தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் புதன்கிழமை தெரிவித்தாா்.
இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) சா்வதேச உயா்கல்வி மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியதாவது: சீரான பொருளாதாரம் மற்றும் இளம் மக்கள்தொகை என இரண்டையும் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
அடுத்த 20 ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளம் இந்தியா்கள் பணிக்குச் செல்லும் வயதை அடையவுள்ளனா்.
இவா்களை நாட்டின் வளா்ச்சிக்குத் தயாா்படுத்த தரமான உயா்கல்வி அவசியம். இதற்கான அடித்தளமாகவே தேசிய கல்விக் கொள்கை, 2020 விளங்குகிறது. இதை முறையாக அமல்படுத்தினால் பெரும் பலன்களைப் பெறலாம்.
பாடத்திட்டம் வடிவமைப்பு, ஆராய்ச்சி, நிா்வாகம், உள்கட்டமைப்பு மேம்பாடு என உயா்கல்வி நிறுவனங்களுடன் தொழில்துறையினா் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள், தொழில் துறையினா், குடிமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் கற்றல், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுக்கும் என்றாா்.