மக்களவை, மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்னைகள் மற்றும் பதிவு செய்த முக்கிய விஷயங்களின் சுருக்கம் வருமாறு:
மக்களவையில்...
"சாந்தி' (அணுசக்தி) மசோதாவுக்கு எதிர்ப்பு!
அருண் நேரு, பெரம்பலூர் (திமுக): ஃபுகுஷிமா, செர்னோபில் போன்ற இடங்களில் நடந்தவற்றை நாம் மறந்து விடக்கூடாது. நமது நாடு பல வெளிநாட்டு அபாயங்களுக்கு இந்த மசோதா மூலம் வழியைத் திறந்துவிடப் போகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மசோதா மறுபரிசீலனைக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கும் அனுப்ப உகந்தது.
சசிகாந்த் செந்தில், திருவள்ளூர் (காங்கிரஸ்) : இந்த மசோதாவுக்கு சாந்தி மசோதா என்று பெயரிடப்படுமானால், விஷத்தை "பிரசாதம்' என்று அழைக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு இந்த மசோதா ஆபத்தானது என அழைக்கலாம். இந்திய வரலாற்றில் முதல் முறையாக, அணுமின் நிலையங்களை சொந்தமாக வைத்து இயக்க தனியார் நிறுவனங்களை இந்த மசோதா அனுமதிக்கிறது. இது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கதவுகளைத் திறக்கிறது. இந்தத் துறையில் இந்தியா எப்போதும் ஒரு வலுவான ஒழுங்குமுறையுடன் மிகச் சிறந்த பங்கேற்பாளராக இருந்து வருகிறது. ஆனால் அவை அனைத்தையும் இந்த மசோதா கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஆர். சுதா, மயிலாடுதுறை (காங்கிரஸ்): சாந்தி மசோதா மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்தியாவின் தேசிய மற்றும் எரிசக்திப் பாதுகாப்புடன் விளையாடுகிறது. அணுசக்தி உற்பத்தியில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீன ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிக்க பாதுகாப்பு காரணங்களுக்காக அணுமின் நிலையங்கள் பெரும்பாலும் தெற்கே கட்டப்படும். அங்கு அணுசக்திப் பேரழிவு ஏற்பட்டால் என்ன ஆகும்? இந்த மசோதாவின் கீழ், மத்திய அரசின் பொறுப்பு குறைக்கப்பட்டுள்ளதுடன் அதை விட குறைவானதாக தனியார் நிறுவனங்களின் பொறுப்பு உள்ளது. 70 ஆண்டுகால மக்கள் வரிப்பணத்துடன் நடந்த ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி மேம்பாட்டின் பலன்களை தனியார் நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைக்க மசோதா வழிவகுத்துள்ளது. நவீன இந்தியாவின் கோயில்கள் புதிய இந்தியாவின் வர்த்தகர்களிடம் விற்கப்படுகின்றன.
ராபர்ட் புரூஸ், திருநெல்வேலி (காங்கிரஸ்): மத்திய அரசின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு மாநிலங்கள் வெறும் மௌனப்பார்வையாளர்களாக இருக்க மசோதா வகை செய்கிறது. நிலம், நீர், சுகாதாரம், பேரிடர் மேலாண்மை போன்ற விஷயங்களில் கூட, மத்திய அரசு அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது. இந்த மசோதா அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தை வலுப்படுத்துவதாகக் கூறுகிறது.
இழப்பீடு வழங்குவதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படாததால் விபத்துக் காலங்களில் பாதிக்கப்படுவோரின் நிலை கவனத்தில் கொள்ளப்படவில்லை. கடைசியில் இந்த மத்திய அரசு அணுசக்தியையும் தனியார் மற்றும் பெருநிறுவனங்களுக்கு வழங்குகிறது.
திண்டுக்கல்-சபரிமலை ரயில் திட்டம் வருமா?
தேனி தொகுதி திமுக உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வனின் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ளபதிலில், திண்டுக்கல் முதல் சபரிமலையின் லோயர் கேம்ப் வரை புதிய ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆய்வறிக்கை வந்த பிறகு இத்திட்டம் தொடர்பான முடிவை அமைச்சகம் அறிவிக்கும் என்றார். மேலும், கேரளத்தில் அங்கமாலி}சபரிமலை இடையிலான ரயில் திட்டத்துக்கு ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்குமாறு மாநில அரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
மாநிலங்களவையில்...
சமக்ர சிக்ஷôவுக்கு விலக்கு கிடைக்குமா?
திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா எழுப்பிய இது தொடர்பான கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி அளித்த பதிலில், சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்ட சமக்ர சிக்ஷô திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதற்கு முழுமையாக ஒத்துப்போகிறது. எனவே, அதை தேசிய கல்விக் கொள்கையிலிருந்து விலக்கும் கேள்விக்கே இடமில்லை என்றார்.
நீக்கம் மற்றும் திருத்த மசோதா மீதான விவாதம்!
கே.ஆர்.என். ராஜேஷ்குமார் (திமுக): காலாவதியான மற்றும் இனி பொருத்தமற்ற சட்டங்களை நீக்குவதில் இந்த அரசாங்கம் ஆர்வம் காட்டுகிறது. ஆனால், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் அதற்கு அக்கறையோ, ஆர்வமோ இல்லை. இந்த மசோதாவின்படி, 1886-ஆம் ஆண்டின் இந்திய டிராம்வேஸ் சட்டம் ரத்து செய்யப்படுகிறது. இது பிரிட்டிஷ் ஆட்சியின்போது நகரங்களில் ரயில் போக்குவரத்துக்காக அமல்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து மெட்ரோ திட்டங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ராஜேஷ்குமார் பேச முற்பட்டபோது அவை மசோதாவுடன் தொடர்புடையவை இல்லை என்று கூறி அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மாநிலங்களவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.