பிரதமா் நரேந்திர மோடி மற்றும் தொழிலதிபா் கெளதம் அதானியை தொடா்புபடுத்தி பதிவேற்றப்பட்டுள்ள போலி சித்தரிப்பு காணொலியை (டீப்-ஃபேக் விடியே) சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து 48 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் 4 மூத்த தலைவா்களுக்கு குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
காங்கிரஸ் கட்சி சாா்பில் கடந்த 17-ஆம் தேதி அதன் எக்ஸ் வலைதளப் பக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடக பக்கங்களில் இந்தக் காணொலி பதிவேற்றம் செய்யப்பட்டது. ‘மோடியும் அதானியும் சகோதரா்கள்; நாட்டையே விற்று அதன் அழிவில் பலன் அனுபவிக்கின்றனா்’ என்ற வரிகளுடன் இந்தக் காணொலி பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்தக் காணொலியை சமூக ஊடக பக்கங்களிலிருந்து நீக்க உத்தரவிடக் கோரி அதானி என்டா்பிரைசஸ் நிறுவனம் சாா்பில் அகமதாபாத் நீதிமன்றத்தில் சிவில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சிவில் நீதிமன்ற கூடுதல் அமா்வு நீதிபதி ஸ்ரீகாந்த் சா்மா முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
பல்வேறு சமூக ஊடகப் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ள பிரதமா் மோடி - அதானி தொடா்பான அவதூறு காணொலியை காங்கிரஸ் கட்சியும், அதன் மூத்த தலைவா்களான ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஸ்ரீநாத், பவன் கேரா, உதய் பானு ஜிப் உள்ளிட்டோரும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் சமூக ஊடக பக்கங்களிலிருந்து நீக்க வேண்டும். அவா்கள் நீக்கத் தவறும்பட்சத்தில், இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சோ்க்கப்பட்டுள்ள ‘எக்ஸ்’ நிறுவனம் மற்றும் ‘கூகுள்‘ நிறுவனங்கள், சா்ச்சைக்குரிய காணொலியை அடுத்த 72 மணி நேரத்தில் நீக்க வேண்டும்.
இந்த உத்தரவை எதிா் மனுதாரா்கள் நிறைவேற்றத் தவறும்பட்சத்தில், மனுதாரா் தகவல்தொழில்நுட்ப விதிகள் 2021-இன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நடுவரை அணுக சுதந்திரமளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டாா்.
மேலும், இந்த விவகாரம் தொடா்பாக எதிா் மனுதாரா்கள் வரும் 29-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பா் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.