மகாராஷ்டிரம்: விதிகளை மீறியதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் (எம்.எல்.ஏ.,) கன்னத்தில் அறைந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வர்ஷா ஏக்நாத் இந்த விடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து, பாஜக எம்.எல்.ஏ.க்கள் அராஜகம் பிடித்தவர்களாக மாறிவிட்டனர் எனப் பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் பகுதியான கட்கோபர் பகுதியில் விதிகளை மீறியதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை பாஜக எம்.எல்.ஏ. பராக் ஷா, கன்னத்தில் அறைந்தார். இந்த விடியோவை காங்கிரஸ் எம்.பி. வர்ஷா ஏக்நாத் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, பாஜகவின் உண்மை முகம் இதுதான் என விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, ''கட்கோபர் பகுதியில் சாலை விதிகளை மீறியதற்காக ஆட்டோ ஓட்டுநரை பாஜக எம்.எல்.ஏ. கன்னத்தில் அறைந்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர், இவர்களின் வழிகாட்டியாக செயல்பட்டு வருவதால், சட்டத்தை இவர்கள் கையில் எடுத்துக்கொண்டனர். அதனை வைத்துக்கொண்டு தெருக்களிலும் சண்டையிடுகின்றனர். இதுதான் பாஜகவின் உண்மையான முகம். பெரிய தொழிலதிபர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் சிவப்பு கம்பளம் விரிப்பவர்கள், ஏழைகளையும் தொழிலாளிகளையும் அடிப்பதில் பெருமை அடைகின்றனர்'' எனப் பதிவிட்டுள்ளார்.
ஓட்டோவை ஓட்டிவந்தவர், போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்கியதாக காவல் துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எம்.எல்.ஏ. விசாரித்தபோது, அவசரமாகச் செல்ல வேண்டும் என ஓட்டுநர் பதிலளித்துள்ளார். இதன் பிறகே ஓட்டுநரை எம்.ஏல்.ஏ., அறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எம்.எல்.ஏ., பராக் ஷா பேசியதாவது, ''கிழக்கு கட்கோபரில் நடப்பதற்கு கூட இடமில்லை. ரிக்ஷா ஓட்டுநர்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் விதிகளை மீறி நடந்துகொள்வதாக நாள்தோறும் எனக்கு குறுஞ்செய்திகள் வரும். இது குறித்து போக்குவரத்து காவலர்களும் அரிதாகவே கவனம் செலுத்துகின்றனர்.
எங்கள் கண்ணெதிரே எம்.ஜி. சாலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் விதிகளை மீறி வண்டி ஓட்டிச்சென்றார். உங்களுக்கு என்ன பிரச்னை என்று அவரிடம் கேட்டபோது, அவசரம் என்று பதில் அளித்தார். சாலை விதிகளை மீற வேண்டாம் என ஆட்டோவில் இருந்த பெண்மணியும் கூறியுள்ளார். ஆனால், ஆட்டோ ஓட்டுநர் விதிகளை மீறி நடந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.