ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகளை தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வீடு ஒன்றில் இருந்து உணவு எடுத்துக் கொண்டு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு பயங்கரவாதிகள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பயங்கரவாதிகளைத் தேடும் நடவடிக்கையை பாதுகாப்புப் படைகள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகள் இணைந்து சோர் மோட்டு கிராமம் மற்றும் மஜால்டா பகுதியை ஒட்டிய கிராமங்களில் இந்த தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இந்த இடம், முன்பு நடந்த மோதலில் காவலர் உயிரிழந்த இடத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் மேற்கு திசையில் அமைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோர் மோட்டு கிராமத்தைச் சேர்ந்த மாங்க்டு ராம் வீட்டிற்கு வந்து அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் சனிக்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில், உணவு எடுத்துச் சென்றதாக உளவுத் துறை தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகள் அங்கு களமிறக்கப்பட்டன.
ஆனால் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர்கள் மேலும் கூறினர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல், கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, பல்வேறு பக்கங்களிலிருந்தும் ஒரே நேரத்தில் சோதனை நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயங்கரவாதிகளை கண்டறிந்து செயலிழக்கச் செய்வதே இதன் நோக்கமாகும். டிசம்பர் 15 ஆம் தேதி, மஜால்டா பகுதியில் உள்ள சோன் கிராமத்தில், ஜெய்ஷ்-இ-முஹமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து நடந்த மோதலில், காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
அடர்ந்த காடுகளும் இருளும் காரணமாக, பயங்கரவாதிகள் தப்பிச் செல்ல முடிந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.