தில்லியில் இருந்து இன்று காலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் ஒரு என்ஜின் செயலிழந்ததால், சில நிமிடங்களில் விமானம் மீண்டும் தில்லியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
தில்லியில் இருந்து மும்பை நோக்கி திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் ஏர் இந்தியாவின் ஏஐ887 (போயிங் 777) விமானம் புறப்பட்டது.
இந்த நிலையில், சில நிமிடங்களில் விமானத்தின் வலதுபுற என்ஜின் செயலிழந்ததால் உடனடியாக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு அவசர தரையிறக்கத்துக்கு விமானி கோரினார்.
இதனைத் தொடர்ந்து, தில்லி விமான நிலையத்துக்கே மீண்டும் திருப்பிவிடப்பட்ட விமானம், பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இதுதொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த தகவலில், விமானத்தின் வலதுபுற என்ஜின் ஆயில் அழுத்தம் பூஜ்ஜியமாக காட்டப்பட்ட நிலையில் தரையிறக்கப்பட்டதாகவும், ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ”விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுத்து, மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மாற்று விமானம் மூலம் காலை 10 மணிக்கு பயணிகள் அனைவரும் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோன்று, கடந்த வாரம் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படுவதற்கு சில விநாடிகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது.
கடைசி நேரத்தில் என்ஜின் கோளாறை விமானி கண்டுபிடித்ததால் விமானம் மீண்டும் நிறுத்தத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்த விமானத்தில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, ஆந்திர அமைச்சர் அச்சன் நாயுடு உள்ளிட்டோர் பயணம் மேற்கொள்ளவிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.