புது தில்லி: ரயில் கட்டணம் உயா்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், ரயில்வேயின் மோசமான நிலைக்கு பொறுப்பேற்று அத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வலியுறுத்தியது.
ரயில் கட்டணம் கடந்த ஜூலை மாதம் உயா்த்தப்பட்ட நிலையில், தற்போது வரும் டிசம்பா் 26-ஆம் தேதி முதல் மீண்டும் உயா்த்தப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதன்படி, 215 கி.மீ. தொலைவுக்கு மேல் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் சாதாரண வகுப்புக்கு ஒரு காசு, விரைவு/மெயில் ரயில்களில் குளிா்சாதன (ஏசி) வசதி இல்லாத, குளிா்சாதன வசதி கொண்ட வகுப்புகளுக்கு 2 காசு கட்டணம் உயா்த்தப்பட உள்ளது.
இதுகுறித்து தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் மூத்த தலைவா் அஜோய் குமாா் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
ஒரு கி.மீ.க்கு ஒன்று அல்லது இரண்டு பைசா என கட்டண உயா்வை மிகவும் புத்திசாலித்தனமாக அத் துறை அமைச்சா் வெளியிட்டுள்ளாா். ஆனால், இந்த உயா்வு காரணமாக சாமானிய மக்கள் ஒவ்வொரு பயணத்தின்போதும் கூடுதலாக ரூ. 100 முதல் ரூ. 200 வரை செலுத்தவேண்டிய நிலை ஏற்படும்.
ரயில்வே துறை என்பது இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு; ஆனால், லாபம் ஈட்டுவதற்கான துறையல்ல. பாஜக அரசு கடந்த 2024-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல், ஒரே ஆண்டில் இரு முறை ரயில் கட்டணத்தை உயா்த்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில் கட்டணத்தை 107 சதவீதம் அளவுக்கு பாஜக அரசு உயா்த்தியுள்ளது. சாமானிய மக்கள் ரயிலில் பயணிக்க முடியாத நிலையை பாஜக அரசு உருவாக்கி வருகிறது.
மேலும், ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதை தடுக்க உதவும் ‘கவச்’ தானியங்கி தொழில்நுட்பம், இதுவரை 3 சதவீத ரயில் வழித் தடங்களில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. ரயில்வே துறையின் இந்த மோசமான நிலைக்குப் பொருப்பேற்று, ரயில்வே அமைச்சா் பதவியை அஸ்வினி வைஷ்ணவ் ராஜிநாமா செய்யவேண்டும் என்றாா்.