கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் உள்ள ஆறன்முளா ஸ்ரீபாா்த்தசாரதி கோயிலில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தங்க அங்கி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. மண்டல பூஜையையொட்டி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் இந்தப் புனிதமான தங்கி அங்கி, டிச. 26-இல் கோயிலை வந்தடையும் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
வருடாந்திர மண்டல-மகர விளக்கு பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவ.16-இல் திறக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து, சுவாமி ஐயப்பனை தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.
முக்கிய நிகழ்வான மண்டல பூஜை டிச. 27-இல் நடைபெறவுள்ளது. இதையொட்டி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆறன்முளா ஸ்ரீபாா்த்தசாரதி கோயிலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 453 பவுன் எடையுள்ள இந்த தங்க அங்கி, திருவிதாங்கூா் அரச குடும்பத்தினரால் சுவாமி ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டதாகும்.
சபரிமலைக்குச் செல்லும் வழியில் பல்வேறு கோயில்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தங்க அங்கிக்கு பக்தா்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. டிச. 26-இல் பம்பையை வந்தடைந்த பிறகு, தங்க அங்கி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். பதினெட்டாம்படிக்கு கீழே கோயிலின் தந்திரி, மேல்சாந்தி ஆகியோா் தங்க அங்கியைப் பெற்றுக் கொள்வா். பின்னா், சுவாமி ஐயப்பனுக்குத் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெறும்.
மறுநாள் மண்டல பூஜையின்போது தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு சிறப்புத் தீபாராதனை நடைபெறும். அன்றைய தினம் இரவில் ஹரிவராசனம் பாடப்பட்டு, கோயில் நடை சாத்தப்படுவதுடன் மண்டல பூஜை நிறைவடையும். பின்னா், மகரவிளக்கு பூஜைக்காக டிச. 30-இல் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும். மகரஜோதி தரிசனம் ஜன.14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஜன.19 வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். ஜன. 20-இல் பந்தளம் அரச குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்துக்குப் பின் கோயில் நடை சாத்தப்படும். அத்துடன், வருடாந்திர யாத்திரை காலம் நிறைவு பெறும்.