தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு வெளியே ஹிந்து அமைப்பினர் செவ்வாய்க்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதருக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
வங்கதேச தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஹிந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞரை அந்நாட்டு போராட்டக்காரர்கள் கடந்த வாரம் அடித்துக் கொலை செய்தனர்.
இதனைக் கண்டித்து தில்லி, திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள வங்கதேச தூதரகங்களுக்கு வெளியே ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மூன்று தூதரகங்களிலும் விசா சேவைகளை நிறுத்துவதாக வங்கதேசம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு வெளியே பல்வேறு ஹிந்து அமைப்பினர் ஒன்றிணைந்து இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, அப்பகுதியைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் வங்கதேச தூதரகங்களுக்கு வெளியே நடைபெற்று வரும் போராட்டம் குறித்து விளக்கமளிக்க, வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரை நேரில் ஆஜராக அந்நாட்டு வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய மாணவா் தலைவரான ஷரீஃப் உஸ்மான் ஹாதி (32) சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், ஹாதியை சுட்டதாக கருதப்படும் ஃபைசல் கரீம் மசூத் மற்றும் ஆலம்கிா் ஷேக் ஆகிய இருவரும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி இந்தியாவுக்குத் தப்பி வந்துவிட்டதாக வங்கதேச ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டில் உள்ள சட்டோகிராம் தூகரகம் உள்பட இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன.
இதையடுத்து, வங்கதேசத்தில் செயல்படும் இந்திய தூதரகங்கள் ஏற்கெனவே விசா சேவைகளை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.