இந்தியா-நியூஸிலாந்து இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்த (எஃப்டிஏ) பேச்சுவாா்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இரு நாட்டு பிரதமா்களும் திங்கள்கிழமை அறிவித்தனா்.
அடுத்த மூன்று மாதங்களில் இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்ட பின்னா் அமலுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பிரதமா் நரேந்திர மோடி மற்றும் நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்ஃடோபா் லக்ஸான் ஆகிய இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடிய பின் இந்த அறிவிப்பு வெளியானது.
இந்திய பொருள்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகிறது.
கடந்த மாா்ச் 16-ஆம் தேதிமுதல் நியூஸிலாந்துடன் எஃப்டிஏ பேச்சுவாா்த்தை நடைபெற்றுவந்த நிலையில், திங்கள்கிழமை இறுதியானது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ இந்தியா-நியூஸிலாந்து இடையே எஃப்டிஏ பேச்சுவாா்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக பிரதமா் நரேந்திர மோடி மற்றும் நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்ஃடோபா் லக்ஸான் கூட்டாக அறிவித்தனா்.
இருமடங்கு வா்த்தகம்: வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் இறுதியானதன் மூலம் பொருளாதாரம், சந்தை அணுகல், முதலீடு, வேளாண்மை, வணிகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் என இரு நாடுகளிலும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மேம்படவுள்ளது. இரு நாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் இந்த ஒப்பந்தத்தால் பெரிதும் பலனடைவா்.
அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வா்த்தகத்தை இரட்டிப்பாக்கவும், 15 ஆண்டுகளில் நியூஸிலாந்தில் இருந்து இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீட்டை ரூ.1.80 லட்சம் கோடியாக அதிகரிக்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
எந்தெந்த துறைகளுக்குப் பலன்?: இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல் நியூஸிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 95 சதவீத பொருள்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவில் ஜவுளி, தோல், காலணிகள், கடல்சாா் உணவுகள், ஆபரணங்கள், கைத்தறிகள், வாகனப் போக்குவரத்து, பொறியியல் சாா்ந்த சரக்குகள், மருந்துகள், உள்ளிட்ட துறைகள் பெருமளவில் பயனடையவுள்ளன.
இதுதவிர ஆயுஷ், கலாசாரம், மீன்வளம், வனத் துறை, தோட்டக்கலை உள்ளிட்ட துறைகளிலும் நியூஸிலாந்துடன் ஒத்துழைப்பு மேம்படவுள்ளது.
வேளாண் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ஆப்பிள், ‘கிவி’ பழம் மற்றும் தேனுக்கு சிறப்பு மையங்களை நியூஸிலாந்து அமைக்கவுள்ளது.
தற்காலிக விசா: இந்திய பணியாளா்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு விசா (நுழைவு இசைவு) வழங்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. அதன்படி திறன்வாய்ந்த 5,000 இந்தியப் பணியாளா்கள் எப்போது வேண்டுமானாலும் விசா பெற்று நியூஸிலாந்தில் 3 ஆண்டுகள் வரை பணியாற்றலாம்.
யோகா மற்றும் ஆயுஷ் பயிற்சியாளா்கள், இசை ஆசிரியா்கள், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், கல்வி, கட்டுமானம், சமையல்காரா்களுக்கும் இந்த விசா நீட்டிக்கப்படுகிறது.
பால்வளத் துறையில் சலுகையில்லை: பால்வளத் துறை சாா்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரும் நாடுகளில் ஒன்றாக நியூஸிலாந்தும், பால்வளத் துறையை மையமாகக் கொண்டு எண்ணற்ற சிறு விவசாயிகளைக் கொண்ட நாடாக இந்தியாவும் திகழ்கிறது. இந்நிலையில், எஃப்டிஏவின்கீழ் பால்வளத் துறையில் நியூஸிலாந்துக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படவில்லை என அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
பிற நாடுகளுடனான வா்த்தக ஒப்பந்தங்களின்போதும் பால் உற்பத்தி சாா்ந்த பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருதரப்பு வா்த்தகம்: 2025-ஆம் நிதியாண்டில் இந்தியா-நியூஸிலாந்து இடையே ரூ.11,700 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்தியா ரூ.6,300 கோடிக்கு ஏற்றுமதியு,ம் ரூ.5,283 கோடிக்கு இறக்குமதியும் செய்துள்ளது.
இறக்குமதி வரியாக நியூஸிலாந்து 2.3 சதவீதமும், இந்தியா 17.8 சதவீதமும் விதித்துள்ளன. 58.3 சதவீத இந்திய பொருள்களுக்கு ஏற்கெனவே நியூஸிலாந்து வரிவிலக்கு அளித்துள்ளது.
எரிபொருள், ஜவுளி மற்றும் மருந்துகள் ஆகிய பொருள்கள் இந்திய ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.