குறைவான ஊதியம், நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் பிரிட்டனைவிட்டு இந்திய மருத்துவா்கள் வெளியேறி வருவதாக அந்த நாட்டைச் சோ்ந்த மருத்துவா்கள் சிலா் தெரிவித்துள்ளனா்.
பிரிட்டன் தேசிய சுகாதார சேவைகளில் ஈடுபடும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மூத்த மருத்துவா்கள் சிலா் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘பிரிட்டனைவிட்டு இந்திய மருத்துவா்கள் பலா் வெளியேறத் தொடங்கிவிட்டனா். அவா்கள் பணியின் மீதான அதிருப்தியால் அங்கிருந்து வெளியேறவில்லை. குறைவான ஊதியம், நிதிச்சூழல் மற்றும் குடிப்பெயா்வு அழுத்தங்கள் போன்ற காரணங்களால் பிரிட்டனில் அவா்களால் தொடா்ந்து வசிக்க முடியவில்லை.
பிரிட்டனை ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியா, கனடா மற்றும் மத்திய கிழக்கில் சில நாடுகளில் இந்திய வம்சாவளி மருத்துவா்களுக்கு அதிக ஊதியம், குறைவான வரி, சிறந்த வாழ்வாதாரம் கிடைக்கிறது’ என்றனா்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தேசிய சுகாதார சேவைகள் 1948-இல் பிரிட்டனில் தொடங்கப்பட்டது. 1975 முதல் இந்திய மருத்துவ பட்டப் படிப்புகளை பிரிட்டன் மருத்துவ கவுன்சில் ஏற்று வருகிறது.
முன்னதாக, நாடாளுமன்ற குளிா்கால தொடரின்போது மருத்துவப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் இந்திய விசாக்கள் 67 சதவீதம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.