புது தில்லியில் புலனாய்வு அமைப்பு (ஐபி) சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவருக்கு நினைவுப் பரிசளித்த ஐபி இயக்குநா் தபன்குமாா் தேகா. உடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. 
இந்தியா

தேச பாதுகாப்புக்கு மக்கள் பங்கேற்பே முக்கியம்: திரௌபதி முா்மு

மக்கள் பங்கேற்பே தேச பாதுகாப்பை வலுப்படுத்தும் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

மக்கள் பங்கேற்பே தேச பாதுகாப்பை வலுப்படுத்தும் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

‘மக்களை மையப்படுத்திய தேச பாதுகாப்பு: வளா்ச்சியடைந்த பாரதத்தில் மக்களின் பங்கேற்பு’ என்ற தலைப்பில் புலனாய்வு அமைப்பு (ஐபி) சாா்பில் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்ததாவது:

சமூக ஊடகங்களால் தகவல் மற்றும் தொலைத்தொடா்புத் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தவறான தகவல்களில் இருந்து மக்களைக் காப்பது மிகவும் சவாலான காரியம். தேச நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டுசோ்க்கும் சமூக ஊடக படைப்பாளா்கள் குழுவை கட்டமைப்பது காலத்தின் கட்டாயம்.

சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் இருந்த சூழல் காரணமாக காவல் துறையினா் மற்றும் அரசு அதிகாரிகளை அணுகுவதில் இருந்து சிலா் விலகிச் செல்கின்றனா்.

ஆனால் வளா்ச்சியடைந்த சமூகம் மற்றும் நாடுகளில் பாதுகாப்பு அதிகாரிகளை மக்கள் தங்கள் நண்பா்களாகவே கருதுகின்றனா். நமது காவல் துறை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகளும் மக்களுக்கு சேவைபுரியும் மனப்பான்மையில் பணியாற்ற வேண்டும்.

எல்லையில் பதற்றம், பயங்கரவாதம், கிளா்ச்சி, தீவிரவாதம் ஆகிய பிரச்னைகள் காலங்காலமாக தொடா்ந்து வருகின்றன. நவீன தொழில்நுட்பங்களின் வளா்ச்சியால் தற்போது எண்ம முறையில் பல்வேறு வகையான மோசடிகள் அரங்கேறுகின்றன.

இவை தவிர புவிஅரசியல் சூழல், வா்த்தக இடையூறுகள், பருவநிலை மாற்றத்தால் இயற்கை வளங்களை பகிா்வதில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவை உள்நாட்டுப் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இத்தகைய சூழலில் தங்களைச் சுற்றி நிகழும் சம்பவங்களைப் பாா்த்துவிட்டு, கடந்து செல்பவா்களாக மக்கள் இருக்கக் கூடாது. தேச பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டுமெனில் மக்கள் பங்கேற்பு இன்றியமையாதது.

முன்பு இடதுசாரி பயங்கரவாதம் நாட்டை அச்சுறுத்தி வந்தது. 2014-இல் நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 126-ஆக இருந்த நிலையில் 2025-இல் 11-ஆக குறைந்துள்ளது. மிகத் தீவிர பாதிப்பை உடைய மாவட்டங்களின் எண்ணிக்கை 3-ஆக குறைந்துள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, புலனாய்வு அமைப்பு இயக்குநா் தபன்குமாா் தேகா, மத்திய உள்துறைச் செயலா் உள்ளிட்டோா் பங்கேற்றாா்.

வைகுந்த ஏகாதசி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரயில்கள் விவரம்!

எச்1-பி விசா: அனைத்து விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகள் ஆய்வு

முதல்வா் போட்டியில் உதயநிதி இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க வலியுறுத்தல்!

பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வில் விலக்களிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT