மக்களவையில் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் அவையில் தாய்மொழியிலேயே ஆற்றிய உரை மற்றும் எழுப்பிய விஷயங்கள் நேரலையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதற்கு சக உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது.
அண்மையில் முடிவடைந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவையில் வழக்கமாகப் பேசப்படும் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகள் நீங்கலாக பிற மொழிகளில் 160 உரைகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பதிவு செய்யப்பட்டுள்ளதை தரவுகள் மூலம் அறிய முடிகிறது. இதில் மிக அதிகபட்சமாக 50 உரைகள் தமிழில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இரண்டாமிடத்தில் 43 உரைகள் மராத்திய மொழியிலும், 25 உரைகள் வங்க மொழியிலும் நிகழ்த்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்கள் அவரவர் தாய்மொழியிலேயே அவைக்குள் பேச உரிமை பெற்றுள்ளனர். முன்னர், அவர்களின் பேச்சு மற்றும் பதிவு செய்யும் கருத்துகள் சக உறுப்பினர்களுக்குப்== புரிய வேண்டுமானால், அந்தத் தாய்மொழியை அறிந்த மொழிபெயர்ப்பாளர்கள் அன்றைய தினம் பணியில் இருப்பது முன்கூட்டியே உறுதிப்படுத்தப்பட வேண்டியிருந்தது. இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை 22 அலுவல் மொழிகளிலும், பிற மாநில மொழியில் பேசுவதை ஆங்கிலம் உள்பட பிற மொழிகளிலும் நேரலையில் மொழிபெயர்க்கும் வசதியை மக்களவைச் செயலகம் தற்போது வழங்கி வருகிறது.
இந்த வசதி மூலம் குளிர்கால கூட்டத்தொடரில் தமிழகத்தின் மூத்த உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ. ராசா, தொல். திருமாவளவன், கே.இ. பிரகாஷ், கலாநிதி வீராசாமி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல் முருகன் உள்பட மொத்தம் 37 எம.பி.க்கள் பல்வேறு விவாதங்களில் ஹிந்தி அல்லது ஆங்கிலம் நீங்கலாக அவரவர் சார்ந்த மாநில மொழிகளில் பேசியுள்ளனர்.
சு. வெங்கடேசன், வி. செல்வராஜ், தங்க.தமிழ்ச்செல்வன், துரை வைகோ, கே. சுப்பராயன், கே. நவாஸ் கனி உள்ளிட்டோர் தமிழில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் விஷ்ணு பிரசாத், ஜோதிமணி, திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் சமீபத்திய கூட்டத்தொடரில் தமிழில் சில நேரங்களில் பேசினர். கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் ஒருமுறை தமிழ் மற்றும் தெலுங்கு மொழி கலந்து அவையில் பேசினார்.
இத்தகைய நேரலை மொழிபெயர்ப்பு வசதி 2023}ஆம் ஆண்டு டிசம்பர் 11}ஆம் தேதி கேள்வி நேரத்தின்போது தொடங்கப்பட்டது. முதலில் 10 மொழிகளுடன் தொடங்கிய இந்தச் சேவை, பிறகு 12 மொழிகளுக்கு விரிவடைந்து, அண்மையில் 22 அலுவல் மொழிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.
மக்களவைத் தரவுகளின்படி, திமுகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான டி.ஆர். பாலு, கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்காலக் கூட்டத்தொடரில் தமிழில் பேசியிருக்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடரில் நடந்த ஒரு விவாதத்தின்போது, திமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது அவையில் இருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக எம்.பி.க்கள் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு தமிழிலேயே பதில் அளியுங்கள், மொழிபெயர்ப்பு வசதி இருப்பதால் அனைத்து உறுப்பினர்களுக்கும் தமிழில் நடக்கும் உரையாடல்கள் புரியட்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
மக்களவையின் இந்த மொழிபெயர்ப்புச் சேவையை முன்மாதிரியாகக்கொண்டு, பிரதமரின் கூட்டங்கள் அல்லது நாடாளுமன்றக் குழு கூட்டங்கள், மத்திய கொள்கை வகுக்கும் குழுவான நீதி ஆயோக்கின் பன்மொழிக் கூட்டங்கள் மற்றும் பிற அரசு மாநாடுகளிலும் மொழிபெயர்ப்பு சேவை பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.