முன்னாள் எம்எல்ஏவின் சகோதரரை கடந்த 2006-ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்ட ஒருவரை குருகிராம் போலீஸாா் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து குருகிராம் காவல் துறையின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி 2011-இல் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தலைமறைவானாா்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு, பல்வால் மாவட்டத்தில் உள்ள அடோஹா கிராமத்தில் அவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அவா் நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூா் மாவட்டத்தில் உள்ள புத்வாரி கலன் கிராமத்தைச் சோ்ந்த மதுபன் (40) என அடையாளம் காணப்பட்டாா். மேலும், அவா் அந்த மாநிலத்தைச் சோ்ந்த லகான் கும்பலுடன் தொடா்புடையவா் என தெரிய வந்துள்ளது.
முன்னாள் எம்எல்ஏவின் சகோதரரும் வழக்குரைஞருமான ஜக்மல் சிங் தக்ரானின் பண்ணை வீட்டில் மதுபன் பராமரிப்பாளராகப் பணியாற்றினாா்.
2006 மே 13-ஆம் தேதி அவா் ஜக்மல் சிங் தக்ரானை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தாா்.
கொலைக்குப் பிறகு, ஆதாரங்களை அழிக்கும் நோக்கத்துடன் பண்ணை வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் உடலை வைத்துப் பூட்டிவிட்டு, இறந்தவரின் காா் மற்றும் விலையுா்ந்த பொருள்களுடன் குற்றவாளி தப்பிச் சென்றாா்.
இதைத்தொடா்ந்து, சதா் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவுகள் 302, 201 மற்றும் 404-இன் கீழ் மதுபன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னா், குருகிராம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட மதுபன் சிறைக்கு அனுப்பப்பட்டனா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2008, மாா்ச் 5-ஆம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 2011-இல் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
இந்நிலையில், நீதிமன்றம் அவரது ஜாமீனை ரத்து செய்து, மீண்டும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதனால், கைது செய்யப்படுவாா் என்ற பயத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா் தொடா்ந்து தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தாா்.
சுமாா் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த அவரை இறுதியாக ஒரு போலீஸ் குழு, செவ்வாய்க்கிழமை பால்வால் மாவட்டத்தில் இருந்து கைது செய்தது.
இதையடுத்து, அவா் நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா் என்று காவல்துறையின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.