தில்லியில் ரூ. 5-க்கு சத்தான உணவு வழங்கும் தி அடல் கேன்டீன் திட்டத்தை மாநில முதல்வர் ரேகா குப்தா தொடக்கி வைத்தார்.
தில்லியில் நாள்தோறும் ரூ. 5-க்கு சத்தான உணவை வழங்கும்வகையிலும், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயை போற்றும்வகையிலும், தி அடல் கேன்டீன் திட்டத்தை ரேகா குப்தா தொடக்கி வைத்தார்.
திட்டத்தைத் தொடக்கிவைத்த ரேகா குப்தா, இந்தத் திட்டத்தின் மூலம் தொழிலாளிகள், ஏழைகள் மற்றும் தேவைப்படுவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். இந்தத் திட்டத்துக்காக ரூ. 104.24 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் சுமார் 700 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
மாநிலம் முழுவதும் இருக்கும் ஒவ்வொரு அடல் உணவகத்திலும் நாள்தோறும் சுமார் 1,000 பேருக்கு உணவு வழங்கப்படும். மேலும், மாநிலத்தில் சுமார் 100 அடல் உணவகங்கள் அமைக்கப்பட்டு. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்போட்டோர் பயனடைவர்.
இவற்றில் 45 உணவகங்கள் இன்றுமுதலே திறக்கப்பட்டன. மீதமுள்ள 55 உணவகங்களும் அடுத்த 15 முதல் 20 நாள்களுக்குள் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அடல் உணவகத்திலும் ஒரு நாளைக்கு இரு முறை உணவு வழங்கப்படும். காலை 11.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையில் மதிய உணவும், மாலை 6.30 மணிமுதல் இரவு 9 மணிவரையில் இரவு உணவும் வழங்கப்படும்.
பருப்பு, அரிசி, ரொட்டி, காய்கறிகள் உள்ளிட்ட சத்தான பொருள்கள் அடங்கிய மெனு தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோர் உணவும் சுமார் 600 கிராம் எடையுடன், சராசரியாக 700 முதல் 800 கலோரிகளையும், 20 முதல் 25 கிராம் புரதத்தையும் வழங்குவதாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.