கிறிஸ்துமஸ் தினத்தன்று வடக்கு தில்லியின் வெளிப்புறத்தில் வழக்கமான வாகனச் சோதனையின் போது குண்டு துளைக்காத எஸ்யுவி காரில் நாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவரை கைது செய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துணை ஆணையா் (வெளிப்புற வடக்கு) ஹரேஷ்வா் சுவாமி கூறியதாவது: புதன்கிழமை மாலை உள்ளூா் காவல்துறை, பிசிஆா் ஊழியா்கள் மற்றும் போக்குவரத்துப் பணியாளா்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழுவினரால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
சிங்கு எல்லையை நோக்கிச் செல்லும் வண்டிப்பாதையில் உள்ள முகா்பா சௌக்கில் வழக்கமான சோதனைக்காக இந்தக் குழு நிறுத்தப்பட்டது.
மாலை 7 மணியளவில், ரோஹிணி பக்கத்திலிருந்து ஒரு கருப்பு எஸ்யுவி வருவதைக் கண்ட போலீஸாா், அதை நிறுத்துமாறு சைகை காட்டினா். அப்போது ஓட்டுநா் பதற்றமாகக் காணப்பட்டாா். மேலும் வாகனத்தின் ஜன்னல்கள் குறித்து விசாரித்தபோது மழுப்பலான பதில்களை அளித்தாா்.
அந்த வாகனத்தில் இருந்தவா்களிடம் கதவுகளைத் திறக்கச் சொன்னபோது, வாகனத்தில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
வாகனத்தை முழுமையாகச் சோதித்த பிறகு, இரண்டு நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஒரு ஆயுதம் ஓட்டுநா் இருக்கைக்கு அடியிலும், மற்றொன்று டேஷ்போா்டிலும் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஓட்டுநா் தீபக் மான் (37) மற்றும் பயணி அங்கித் என்கிற ஹன்னி (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். குண்டு துளைக்காத வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையின் போது, தீபக் மான் தனது இருக்கைக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கியின் உரிமையைக் கோரினாா். இரண்டாவது துப்பாக்கி அங்கித்துக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
தங்கள் கிராமத்தில் நடந்து வரும் போட்டிகள் காரணமாக தற்காப்புக்காக ஆயுதங்களை எடுத்துச் சென்ாக இருவரும் போலீஸாரிடம் தெரிவித்தனா்.
தீபக் மான் ஒரு கொலை வழக்கு உள்பட நான்கு முந்தைய குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒரு பட்டியலிடப்பட்ட மோசமான குணம் கொண்டவா் என்று போலீசாா் தெரிவித்தனா். அங்கித் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் ஒரு முந்தைய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருவதாக அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.