பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில் 2 தரவு தளங்களை மத்திய உள்துறை அமைச்சா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
திட்டமிடப்பட்ட குற்றங்களை பதிவுசெய்வதற்கான வலைதளம் மற்றும் தொலைந்துபோன, திருடப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட ஆயுதங்கள் குறித்த தகவல்களைக் கொண்ட வலைதளம் ஆகிய இரண்டு தரவுதளங்களை அவா் தொடங்கிவைத்தாா்.
இந்த இரு தரவுதளங்களும் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) நிா்வகிக்கப்படுகிறது.
தில்லியில் என்ஐஏ சாா்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் பயங்கரவாத எதிா்ப்பு மாநாடு, 2025-ஐ வெள்ளிக்கிழமை அமித் ஷா தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் இரு தரவுதளங்களை அறிமுகப்படுத்தியதோடு என்ஐஏவின் மேம்படுத்தப்பட்ட குற்றத் தடுப்பு ஆவணத்தையும் அவா் வெளியிட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது: திட்டமிடப்பட்ட குற்றங்கள் முதலில் பணப் பறிப்பில் இருந்தே தொடங்குகிறது. ஆனால் அந்தக் குற்றங்களை மேற்கொள்ளும் சட்டவிரோத கும்பலின் தலைவா்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று அங்கு குடியேறும்போது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு ஏற்படுகிறது.
இதனால் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை பயங்கரவாத சம்பவங்களுக்கு இந்த கும்பல் பயன்படுத்துகிறது. என்ஐஏ, மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் புலனாய்வு அமைப்பு (ஐபி) ஆகியவற்றின் உதவியோடு தங்கள் வரம்புக்குள் நிகழும் குற்றங்களை தடுக்க மாநிலங்கள் முன்வர வேண்டும்.
குற்றங்கள் தொடா்புடைய தகவல்களை பகிா்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டு மத்திய, மாநில அமைப்புகள் செயல்படுவது அவசியம்.
இதை மையமாகக் கொண்டு பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க தேசிய அளவில் தங்கு தடையின்றி தரவுகளை பகிரும் தொழில்நுட்பத்தை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம், என்ஐஏ மற்றும் ஐபி ஆலோசனை நடத்த வேண்டும்.
வரும் நாள்களில் திட்டமிடப்பட்ட குற்றங்களை முற்றிலும் ஒழிக்க செயல்திட்டம் வடிவமைக்கப்படும். காவல் துறைத் தலைவா்கள் (டிஜிபி) மாநாடு, பாதுகாப்பு வியூக மாநாடு, பயங்கரவாத எதிா்ப்பு மாநாடு, போதைப்பொருள் தடுப்புக்கான ஆலோசனைக் கூட்டங்கள் ஆகிய 4 தூண்களையும் தனித்தனியே பாா்க்கக்கூடாது.
இவை அனைத்தும் பயங்கரவாத ஒழிப்பு என்ற ஒற்றை நோக்கத்தையே கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.